கேரள மாநிலத்தில் அவசரமாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ்க்கு, வழி விடாமல் பாதையை மறித்து சென்ற கார் உரிமையாளருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உரிமமும் ரத்து செய்யப்பட்டது. 


நடந்தது எங்கு?


இந்த சம்பவமானது, கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில், கடந்த நவம்பர் மாதம் 7 ஆம் தேதி திருச்சூர்மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் வழித்தடத்தில் ஆம்புலன்ஸ் பயணித்ததாக தகவல் கூறுகின்றன. அப்போது, மாருதி சுஸுகி கார் ஒன்று,  ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல், செல்லும் காட்சியை பார்க்கமுடிகிறது. அந்த வீடியோவில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ,  பலமுறை ஒலி எழுப்பியும், கார் டிரைவர் வழி விடாமல்செல்வதையும் பார்க்க முடிகிறது. 


வீடியோ: 






மோட்டார் வாகனச் சட்டத்தின் 194இ பிரிவின் கீழ், தீயணைப்பு சேவை வாகனம், ஆம்புலன்ஸ் அல்லது மாநிலஅரசால் நியமிக்கப்பட்ட பிற அவசர ஊர்தியை கடந்து செல்ல அனுமதிக்காத எந்தஓட்டுநருக்கும் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை, ரூ. 10,000  அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். 


இந்நிலையில் கார் உரிமையாளருக்கு, ஆம்புலன்ஸுக்கு வழி விடாததுமற்றும் மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழில் (PUCC) இல்லாதது உள்ளிட்ட பல விதிமீறல்களுக்கு ஈடுபட்டதாக கூறி , அவருக்கு ரூ.2.5 லட்சம்  அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் , அவரது ஓட்டுநர் உரிமமும் பறிக்கப்பட்டது.


கடும் விமர்சனம்:


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து,  ஆம்புலன்ஸ் செல்ல அனுமதிக்காத வாகன ஓட்டுநரை நெட்டிசன்கள்கடுமையாக விமர்சித்துள்ளனர். அதில் ஒருவர், மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சரையும் டேக் செய்து, சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் சட்டங்களின் ஒரு பகுதியாக, ஆம்புலன்ஸுக்கு வழி விடுவது,  ஒரு முக்கியமான அம்சம் , அதற்குவழி விடாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை தயவுசெய்து உறுதிப்படுத்துங்கள் என தெரிவித்திருந்தார்.


மற்றொருவர் தெரிவிக்கையில் "இத்தகைய மனிதாபிமானமற்ற சுயநலச் செயலில் ஈடுபட்டவர், ஜாமீனில் வெளிவர முடியாத சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.