வரதட்சணை என்னும் கொடுமையால் கேரளாவில் மேலும் ஒரு இளம்பெண் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். காவல்நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவரது தற்கொலை கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவின் ஆலுவாவைச் சேர்ந்தவர் மோபியா. 21 வயதான இவர் தொடப்புழாவில் சட்டம் பயின்றுள்ளார். இவருக்கு வீட்டில் திருமண வரம் பார்த்த நிலையில் திருமண ப்ரோக்கர் சுஹைல் என்பவரின் வரன் குறித்து தெரிவித்துள்ளார். ஆனால் அந்த வரனை வேண்டாமென பெண் வீட்டார் மறுத்துவிட்டனர். ஆனாலும் மோபியாவை பேஸ்புக்கில் கண்டுபிடித்த சுஹைல் அவரிடம் நட்பாக பேச்சுக்கொண்டுத்துள்ளார். இதனால் இருவருக்கும் பிடித்துபோக கடந்த வருடம் ஏப்ரலில் இருவருக்கும் இடையே திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு முன் பெண் வீட்டாரிடம் தான் துபாயில் பணியாற்றுவதாகவும், யூடியூப் பணியில் இருப்பதாகவும் சுஹைல் தெரிவித்துள்ளார். ஆனால் திருமணத்துக்கு பின் தான் திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அதற்கு ரூ.40 லட்சம் வேண்டுமென்றும் மோபியாவிடம் கேட்டுள்ளார்.
ஆனால் வரதட்சணையில் விருப்பம் இல்லாத மோபியா பணம் தரமுடியாது என மறுத்துள்ளார். அதற்கு பின் இருவருக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது. மோபியா தந்தை கூறிய தகவலின்படி, வரதட்சணை கேட்டு மிரட்டி மோபியா உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார். சுஹைல் வேலை எதுவுமே பார்க்கவில்லை. மோபியாவின் வருமானத்திலேயே அவர் நாட்களை ஓட்டியுள்ளார். தொடர்ந்து பிரச்னை அதிகரிக்க இது தொடர்பாக ஆலுவா காவல் நிலையத்தில் நவம்பர் 22ம் தேதி புகாரளித்துள்ளார் மோபியா. காவல் நிலையத்தில் குடும்பத்தினர் கூடி இருக்கும் போதே மோபியாவிடம் கடுமையாக நடந்துகொண்டுள்ளார் சுஹைல்.
இதனால் மனம் வருந்திய மோபியா, வீட்டிற்கு வந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். அவர் எழுதியுள்ள தற்கொலைக் கடித்தத்தில், '' வரதட்சணை புகாரை கண்டுகொள்ளாத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்ட தகவலின் அடிப்பையில் சுஹைல் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வரதட்சணை புகாரை விசாரிக்காத காவல் அதிகாரி மீது துறை ரீதியிலான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மோபியா தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டப்படி போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னதாக, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதே நிரம்பிய இளம் பெண் விஸ்மயா மர்மமான முறையில் தன்னுடைய கணவர் வீட்டில் இறந்திருந்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வரதட்சணைக்கு எதிராக அம்மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. ஆனாலும் மீண்டும் ஒரு உயிர் வரதட்சணைக்காக காவு வாங்கப்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050