கேரளம் மாநிலத்தில் எர்ணாகுளம் பகுதியில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் நிறுவனமானது, இதன் தயாரிப்புகளை , குறிப்பிட்ட அளவு விற்பனை செய்ய வேண்டும் என ஊழியர்களுக்கு நிர்ணயம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நிர்ணயத்தை எட்டாத ஊழியர்களுக்கு, கடுமையான தண்டனை வழங்குவதாகவும் , அவமரியாதை செய்வதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஊழியர்களின் கழுத்தில் கயிற்றால் கட்டி நாய் போன்று குரைக்க வேண்டும் , குரங்கு போல தாவ வேண்டும் என்றும் கொடுமைப்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அடிமை போல் நடத்தப்பட்ட ஊழியர்?
இது தொடர்பாக வீடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வெளியாகியுள்ள வீடியோவில், ஒரு ஆண் ஊழியரின் ஆடைகளை களையச் செல்வதை பார்க்க முடிகிறது. மற்றொரு வீடியோவில் ஒரு ஊழியரின் கழுத்தில் பெல்ட்டால் கழுத்தில் கட்டப்பட்டு நாய் போல நடந்து செல்ல வேண்டும் என்பது போல காட்சியை பார்க்க முடிகிறது.
கேரளம் அமைச்சர் கருத்து
இந்நிலையில், இது தொடர்பாக கேரளம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்திருப்பதாவது” இந்த காட்சியானது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும், காவல்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை அடிப்படையில், தனியார் நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிவன்குட்டி தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையமும் விசாரணையில் இறங்கியுள்ளது.
கண்டன குரல்கள்
இந்நிலையில், இந்த காட்சிகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் , பெரும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்தியா சுதந்திர நாடு, இங்கே , ஒரு அடிமைத்தனம் போல் ஊழியர்கள் நடத்தப்படுவதை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த நிறுவனத்தின் மீதும், இவ்வாறு நடந்து கொண்டவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழியகளின் வேலையால் நிறுவனமும், நிறுவனத்தால் ஊழியர்களும் என இருவருமே ஆதாயம் அடைகின்றனர். இதில், அடிமைகள் போல நடத்துவதற்கு எங்கே இடம், அவர்களுக்கு அதிகாரத்தை யார் கொடுத்தது என்றும் கண்டனங்கள் எழுகின்றன. மேலும், இவர்கள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளாதவர்களுக்கு, கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்துகள் எழுந்து வருகின்றன.
ஊழியர் கருத்து:
ஆனால், பாதிக்கப்பட்ட ஊழியர் ஒருவர் தெரிவித்திருப்பதாவது “ சமூக வலைதளங்களில் வெளியான காட்சி உண்மையானவை இல்லை. சில தினங்களுக்கு முன்பு, எங்கள் நிறுவனத்தில் வேலை பார்த்த நபர் ஒருவர், நிறுவனத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இதனால் , விரக்தியின் காரணமாக , வீடியோக்களை சித்தரித்து வெளியிட்டிருக்கிறார். என்னை யாரும் அவமரியாதையாக நடத்தவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் இருவேறு முரண் கருத்துகள் எழுந்துள்ளதால், எது உண்மை என்று காவல்துறையினரின் விசாரணைக்கு பின் தெரியவரும்.