கேரளாவின் கொல்லம் பகுதியின் சஸ்தம்நாடா பகுதியைச் சேர்ந்தவர் கிரன்குமார். இவர் ஆயுர்வேத மருத்துவருக்கு படிக்கும் 24 வயது விஸ்மயாவை கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆன நிலையில் நேற்று காலை கிரன்குமார் வீட்டில் விஸ்மயா உயிரிழந்துள்ளார். திடீரென இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது முழுக்க முழுக்க வரதட்சணை கொடுமையால் நடந்த கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதற்கு முழு ஆதாரமாக இருக்கிறது இரு தினங்களுக்கு முன் விஸ்மயா அனுப்பிய வாட்ஸ் அப் பதிவுகள். விஸ்மயா தன்னுடைய உறவினருக்கு அனுப்பிய அந்த பதிவில், தன் கணவர் தன்னுடைய தலைமுடியை இழுத்து என்னை தாக்கினார். என்னை துன்புறுத்தினார். இதுகுறித்து யாரிடமும் நான் எதுவும் சொல்லவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கைகளிலும், முகத்திலும் காயத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். சரியாக வாட்ஸ் பதிவு அனுப்பி இருதினங்களுக்கு பிறகு விஸ்மயா இறந்திருப்பது அவரது குடும்பத்தினரிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.




இது வரதட்சணை கொடுமை மற்றும் கொலை என விஸ்மயா குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து தெரிவித்த விஸ்மயாவின் தந்தை, 'எங்கள் மகளுக்கு வரதட்சணையாக 100 சவரன் நகை, ஒரு ஏக்கர் நிலம், டொயோட்டா யாரிஸ் கார் கொடுத்தோம். ஆனால் கிரண் காருக்கு பதிலாக பணமாக கேட்டார். வாங்கிய காரை விற்கவும் கூறினார். ஒரு முறை குடித்துவிட்டு என் மகளை அவர் அடித்தார். என் மகன் அவரிடம் இது குறித்து கேட்டான். அவர் அவனையும் தாக்கினார். பின்னர் இது காவல்நிலையம் வரை சென்றது.  போலீசார் பேசி சமாதானம் செய்தனர். அதன் பின்னர் என் மகள் எங்கள் வீட்டில் தான் இருந்தார். இரண்டு மாதங்களுக்கு பிறகு அவர் கல்லூரிக்கு தேர்வு எழுதசென்றார். அங்கு சென்ற கிரண், அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அதற்கு பின் என் மகள் வரவே இல்லை. கிரண் அடிப்பது குறித்தெல்லாம் என் மனைவியிடம் தான் அவர் கூறியுள்ளார். என்னிடம் கூறவே இல்லை. எனக்கு இப்போதுதான் எல்லாம் தெரியும் என்றார்.




இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என கூறும் விஸ்மயாவின் சகோதரர் விஜித், அரசு இந்த கொலைக்கு சரியான நியாயத்தை வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.


இந்த விவகாரம் குறித்து பேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் ஷாஹிதா கமல், '' இது வரதட்சணைக்கான கொலை என்றால் விரைவில் வழக்கு பதியப்படும். இறந்தவரின் சகோதரர் எங்களை தொடர்புகொண்டு நடந்த விவரத்தையும், வாட்ஸ் அப் சாட், காயமடைந்த புகைப்படங்களை காட்டினார். நாங்கள் இப்போது காவல்நிலையத்தின் உதவியை நாடியுள்ளோம். உடற்கூராய்வு முடிவுக்கும் காத்திருக்கிறோம். திருமணமாகி 10 ஆண்டுகளுக்குள் பெண் தற்கொலை செய்துகொண்டாலும் அது வரதட்சணை கொடுமைக்குள்தான் வரும். என்றார்.




விஸ்மயாவின் உடல் உடற்கூராய்வுக்காக திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பப்பப்பட்டுள்ளது. உடற்கூராய்வு ஆய்வுக்கு பிறகே போலீசார் மற்றும் பெண்கள் ஆணையத்தின் நடவடிக்கைகள் இருக்குமென தெரிகிறது. இளம்பெண்ணின் மரணம் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்வது பெரும் மனவலியை தருவதாக பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 


நன்றி: தி நியூஸ் மினிட்


சீனாவில் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த பிரபல அணு விஞ்ஞானி..!