புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடியே பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 மாணவிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் கல்லூரியில் குடியரசு தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
விளையாட்டு போட்டி நிறைவடைந்ததும் இன்று இன்று மதியம் மாயனூர் கதவணை பகுதிக்கு சுற்றி பார்க்க வந்துள்ளனர். மாயனூர் கதவணை அருகே உள்ள செல்லாண்டியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின் அங்குள்ள காவிரி ஆற்றில் மாணவிகள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற நீச்சல் தெரியாத மாணவி ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார். அதனைக் கண்டு சக மாணவிகள் அவரை காப்பாற்ற முயன்ற போது அவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதனையடுத்து மாணவிகள், ஆசிரியர்களும் செய்வதறியாத நிலையில், அருகில் உள்ள பொதுமக்கள் இதுகுறித்து கரூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் காவிரி ஆற்றில் படகின் மூலம் நீரில் மூழ்கிய நான்கு பேரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் நான்கு பேரும் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து சடலமாக மீட்கப்பட்டனர். இறந்தவர்கள் அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவி தமிழரசி, ஏழாம் வகுப்பு மாணவி சோபியா, ஆறாம் வகுப்பு மாணவிகள் இனியா லாவண்யா என்பது தெரிய வந்தது. நான்கு பேரின் உடல்களை மீட்ட மாயனூர் போலீசார் கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மற்றும் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பேட்டியளிக்கையில்,
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே தனியார் கல்லூரியில் குடியரசு தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கு பெறுவதற்காக வந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மிகவும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மாயனூர் காவிரி ஆற்று பகுதிகளில் ஆழமான பகுதிகள் என எச்சரிக்கை பலகையில் வைத்தும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் நீரின் நீர் ஆழமான பகுதிக்கு குளிக்க செல்கிறார்கள் எனவும் அதனை வருங்காலங்களில் தவிர்க்க வேண்டும் எனவும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு தமிழக முதல்வருக்கு அறிக்கை அளிக்கப்பட உள்ளதாகவும், அதன் மூலம் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் நிவாரணம் அளிக்க வழிவகை செய்வதாகவும் கூறினார்.
மேலும் ஆற்றில் குளிக்க சென்ற மாணவிகளின் சுமார் ஏழு பேர் நீரில் மூழ்கியதாகவும் நீச்சல் தெரிந்த கீர்த்தனா என்ற மாணவி மூன்று மாணவிகளை காப்பாற்றிய நிலையில், நான்கு மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கிருத்திகா என்ற மாணவி 3 மாணவிகளை காப்பாற்றவில்லை எனில் பலி எண்ணிக்கை அதிகரித்திருக்க கூடும்.