கடந்த 19. 11. 2021 வெள்ளிக்கிழமை மாலை வெண்ணை மலை அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்துவரும் பள்ளி மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெங்கமேடு போலீஸார் கைப்பற்றி கடிதத்தில் உள்ள பதிவுகள் மூலம் குற்றவாளியை தேடி வந்த நிலையில் அவரது அலைபேசி மற்றும் இன்னும் பல்வேறு தகவல் அடிப்படையில் அவர் பள்ளியில் வகுப்பு மாணவர்கள் வகுப்பு ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.


இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக இன்று மாலை கரூர் தனியார் பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் என்ற 42 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் தனது மாமனார் வீடு அமைந்திருக்கும் துறையூர் செங்காட்டுபட்டி பகுதியில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.




தனியார் பள்ளியில் இவர் பதினொன்றாம் வகுப்பு கணித பாடப்பிரிவில் பாடம் எடுத்து வந்த நிலையில் இவருக்கு மனைவியும், தாயும், தந்தையும் ,இரண்டு குழந்தைகளும் உள்ளனர். காமராஜபுரத்தில் வசித்து வருகிறார். இவர் சொந்த ஊர் கரூர் வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியாகும். இவர் துறையூர் பகுதியில் அவருடைய மாமனார் நடராஜ் இல்லத்தில் இன்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.




இவர் இன்று தனியார் பள்ளியில் காலை பணிக்கு வந்து மதியம் பள்ளி நிர்வாகத்திடம் எனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி விடுப்பு எடுத்து, திருச்சி மாவட்டம் துறையூர் பகுதிக்கு வந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கணித ஆசிரியர் சரவணன் இறப்பு, தொடர்ந்து தனியார் பள்ளியில் படித்த மாணவியின் வழக்கை விசாரித்து வரும் போலீசாரின் கவனத்துக்கு வந்துள்ளது.  இவருக்கும் பள்ளி மாணவிக்கும் தொடர்பு உண்டா அல்லது என்ன காரணத்திற்காக இவர் தனது மாமனார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




துறையூர் பகுதி செங்காட்டுபட்டி சேர்ந்த பகுதியில் அவர் இறந்ததால், அவரது உடலை துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இது சம்பந்தமாக துறையூர் போலீசார் வெங்கமேடு போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் மாணவியின் தற்கொலை வழக்கில் விசாரித்து வந்த 6 தனிப்படை போலீசார், இந்த தற்கொலை சம்பவம், மாணவியின் தற்கொலைக்கு முடிவுக்கு காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் தொந்தரவு காரணமா? என விசாரித்து வருகின்றனர்.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050