கரூர் மாவட்டம், சிந்தாமணிபட்டி பகுதியை சேர்ந்தவர் ரேவதி. இவர் நர்சிங் படித்து வருகிறார். இவரை சசிகுமார் என்பவர் காதல் திருமணம் செய்து மூன்று மாதத்திற்கு ரகசியமாக குடும்பம் நடத்திய பிறகு, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என காரணம் காட்டி கணவர் சசிகுமார் கைவிட்டுவிட்டார். இதனைத்தொடர்ந்து, சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு குளித்தலை டிஎஸ்பி-யிடம் எஸ்.பி அனுப்பி வைத்தார். ஆனால், புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் டிஎஸ்பி காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதையடுத்து நடவடிக்கை எடுக்காத டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கவும், திருமணம் செய்த பிறகு சாதியை காரணம் காட்டி ஏமாற்றிய சசிகுமார் மீதும் வழக்கு பதியக்கோரி நர்சிங் மாணவி ரேவதி தனது உறவினர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண் ரேவதி கூறியதாவது: கரூரில் நர்சிங் படித்தபோது தரகம்பட்டி சசிகுமாருக்கும், எனக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நாங்கள் கோவை சென்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தோம். எனது தந்தை கொடுத்த புகாரால் எங்களை மீட்டு வந்த போலீசார், என்னை என் தந்தையுடன் ஒப்படைத்தார். சசிகுமார் என்னை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு மீண்டும் வெளியேறினார். மீண்டும் எங்களை அழைத்து வந்த சசிகுமார் குடும்பத்தினர், என்னை திட்டியும், அடித்தும் துன்புறுத்தினர்.
அவர்களிடமிருந்து நான் தப்பி என் வீட்டிற்கு வந்தேன். காவல் நிலையத்தில் நாங்கள் இதுகுறித்து புகார் அளித்தும் வெள்ளியணை போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எஸ்பியிடம் புகார் அளித்தோம். எஸ்பி- யின் உத்தரவின் படி குளித்தலை டிஎஸ்பி, வெள்ளியணை காவல் நிலையம் என்று பல காவல் நிலையங்கள் சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லை.
அதனால் இப்பொழுது எஸ்பி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ளோம். நாங்கள் அளித்த புகாரின் பேரில் சசிகுமார் குடும்பத்தார் மீது வழக்கு பதிய வேண்டும். எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று அப்பெண் கூறினார். அப்பெண் மற்றும் குடும்பத்தாருடன் எஸ்பி அலுவலகம் காவல்துறை அதிகாரிகள் பேசி வருகின்றனர்.
ரேவதி காதல் கல்யாணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்த நிலையில், தற்போது தன் கணவனை பிரிந்து இருக்கும் இந்த நிலையில் மிகவும் உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் அப்பெண்ணுக்கு சரியான தீர்வை காவல்துறையினர் அளிக்குமாறு அப்பெண்ணின் குடும்பத்தாரால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அப்பெண் தன் கணவன் குடும்பத்தார் துன்புறுத்தியதாகவும், கணவனை தன்னுடன் சேர்த்து வைக்க கோரியும் எஸ்பி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கரூர் சரக டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான போலீசார் சசிகுமார் மீது உறுதியாக வழக்குப்பதிய சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக, உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் களைந்து சென்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்