கரூர்: குளித்தலை அருகே பிச்சம்பட்டியில் பேரூராட்சி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் கணவர், மகன் மீது மது, கஞ்சா போதையில் இருந்த கும்பல் பீர் பாட்டிலால் தாக்குதல் நடத்தியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.



கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியில் 10வது வார்டு கவுன்சிலராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தேவி இருந்து வருகிறார். இவரது கணவர் நாகராஜ், மகன் விக்னேஷ் இருவரும், கரூர் தான்தோன்றி மலையில் உள்ள தனது ஹார்டுவேர் கடையில் பணி முடிந்து  இரவு பேருந்தில் வந்து கிருஷ்ணராயபுரம் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துள்ளனர்.


 




 


அப்போது பிச்சம்பட்டி வாய்க்கால் பாலம் சாலையில் நடுவே அமர்ந்த இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மது போதையிலும், கஞ்சா போதையிலும் இருந்துள்ளனர். இவர்களின் இருசக்கர வாகனத்தை மறித்து தகராறு செய்துள்ளனர். அப்போது நானும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவன் தான் என்று நாகராஜ் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், ஒரு இளைஞர் அருகில் இருந்த இளைஞர்களை அழைத்துக் கொண்டு சற்று தொலைவில் சென்று கொண்டிருந்த நாகராஜ் மற்றும் அவரது மகன் விக்னேஷின் இருசக்கர வாகனத்தை மறித்து பீர் பாட்டிலால் கடுமையாக தாக்கியுள்ளனர். 


 




 


 


இதில் நாகராஜன் மகன் விக்னேஷ் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். அப்போது சாலையில் மற்ற இருசக்கர வாகனங்கள் வருவதை பார்த்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். சாலையில் சென்றவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு கோவக்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் வருகின்றனர். இது குறித்து மாயனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.