கரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து கரூர் வந்த குடும்பத்தினரின் கார், நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 1/2 வயது குழந்தை பலி ஆகியது. கணவன், மனைவி படுகாயம் அடைந்தனர்.


 




 


 


கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (34), இவர் சென்னையில் ஒரு ஐ.டி கம்பெனில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கீர்த்தனா (30) என்கின்ற மனைவியும், சுஷ்மிதா (வயது 2 1/2) என்கின்ற பெண் குழந்தையும் உள்ளனர். இவர்கள் மூன்று பேரும் தீபாவளிக்கு, சொந்த ஊருக்கு சென்று, கரூர் வருவதற்கு தங்களது காரில் சென்னையிலிருந்து  இரவு புறப்பட்டு வந்துள்ளனர். கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மணவாசி டோல்பிளாசா அருகே, வந்து கொண்டிருந்தனர். அப்பகுதியில் சாலை மேடு பள்ளமாக பழுதடைந்து உள்ள காரணத்தால்,  திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து 15 அடி பள்ளத்தில் கார் உருண்டு கவிழ்ந்துள்ளது. சுதாகர் சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை முடிந்து, பின்னர் கரூருக்கு செல்லலாம் என்று முடிவு செய்து தனது மனைவி, குழந்தையுடன் காரில் புறப்பட்டு வந்தார். அவர் வேலை செய்து ஓய்வு எடுக்காமல் தூக்க கலக்கத்திலேயே வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த சாலை மேடும் பள்ளமாக இருக்கிறது. அந்தத் தூக்க கலக்கத்தில் இரவில் வந்ததால், மேடு பள்ளம் தெரியாமல் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது.


 




 



அதில் சுதாகர் சீட் பெல்ட் போட்டு இருந்த காரணத்தால், அவருக்கு எந்தவிதமான அடியும் படவில்லை. ஆனால், குழந்தை மற்றும் மனைவியும் எதுவும் போடாமல் இருந்ததால், மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தையானது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதில் 2 1/2 -வயது குழந்தை சுஷ்மிதா தூக்கி எரியப்பட்ட நிலையில், தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி படுகாயம் அடைந்த நிலையில் காரில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்த சுதாகர் தூக்கி எறியப்பட்டு தூரத்தில் இறந்து கிடந்த குழந்தையை தூக்கி மடியில் போட்டு அடித்துக்கொண்டு அழுதார். அவ்வழியாக வந்த பொதுமக்கள், டோல்பிளாசா  ரோந்து வாகன ஊழியர்கள், படுகாயம் அடைந்த கணவன், மனைவியை மீட்டு தேசிய நெடுஞ்சாலை ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் அவ்வழியாகச் சென்றவர்களை வேதனை அடைய செய்தது. விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 




 


சென்னையில் வேலை முடித்து, ஆசை ஆசையாக தனது சொந்த ஊரான கரூருக்கு தீபாவளியை கொண்டாட வந்தார்கள். சென்னையில் இருந்து இவ்வளவு தூரம் நன்றாக வந்தோம். ஆனால், இங்கு வந்து அதுவும் தனது சொந்த ஊரான கருவூருக்கு வந்து, என் பிள்ளை இப்படி இறந்து போகணுமா? என்று கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார். அவரது மனைவியும் என் பிள்ளையை காப்பாத்துங்க ! காப்பாத்துங்க ! என கதறினார்.