காரைக்கால்: காரைக்காலில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறியும் வகையில் காவல்துறை சார்பில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ‘மக்கள் மன்றம்’ குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று காரைக்காலில் நடைபெற்ற மக்கள் மன்றக் கூட்டத்தில் புதுச்சேரி மாநில காவல்துறை டி.ஐ.ஜி. சத்யா சுந்தரம் நேரடியாகப் பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் தங்களது புகார்கள் மற்றும் கோரிக்கை மனுக்களை அவரிடம் அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கனிவோடு கேட்டறிந்த டி.ஐ.ஜி. சத்யா சுந்தரம், பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது எவ்வித தொய்வுமின்றி, உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு கறாரான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
இலங்கைக்கு கடத்த முயன்ற 5 ஐம்பொன் சிலைகள் மீட்பு
குறைதீர்ப்பு கூட்டத்தை முடித்துக் கொண்ட டி.ஐ.ஜி. சத்யா சுந்தரம், கடந்த சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அடுத்துள்ள திருவாடையூர் பகுதியில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான பழமை வாய்ந்த ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சிவன் கோயிலில் கடந்த ஜூன் மாதம் 21-ஆம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
அங்கு பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, கலை நயம் மிக்க ஐம்பொன் சிலைகளான;
* அமிர்தகரவல்லி சிலை
* சண்டிகேஸ்வரர் சிலை
* அப்பர் சிலை
* மங்களநாயகி சிலை
* மேலும், ஒரு வெண்கலத்தினால் ஆன பாவை விளக்கு (விளக்கேற்றும் சாமி சிலை)
ஆகிய 5 சிலைகளையும் அடையாள தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். மறுநாள் காலையில் கோயில் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகிகள், இதுகுறித்து மணல்மேடு காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படைகள் அமைத்துத் தீவிரமாகப் புலனாய்வு செய்து வந்தனர்.
சிலைகள் திருடப்பட்டுத் தேடப்பட்டு வந்த நிலையில், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டப் பகுதிக்குத் தமிழக உளவுத்துறையிடமிருந்து மிக முக்கியமான ரகசியத் தகவல் ஒன்று கிடைத்தது. தமிழகத்தில் திருடப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பழங்காலச் சிலைகள், காரைக்கால் கடற்கரைப் பகுதி வழியாக விசைப்படகு மூலம் இலங்கைக்குக் கடத்தப்படத் திட்டமிடப்பட்டிருப்பதாக அத்தகவல் எச்சரித்தது.
இதனைத் தொடர்ந்து, காரைக்கால் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், காரைக்கால் நகரப் போலீசார் மற்றும் தனிப்படையினர் காரைக்கால் எல்லைப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த துல்லியமான தகவலின் அடிப்படையில், காரைக்கால் தருமபுரம் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வீட்டில் போலீசார் அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர்.
உடனடி மீட்பு
போலீசாரின் இந்தத் திடீர் சோதனையின் போது, அந்த வீட்டில் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 பழமையான ஐம்பொன் சிலைகள் மற்றும் 1 வெண்கலப் பாவை விளக்கு ஆகிய 5 சிலைகளும் பத்திரமாக மீட்கப்பட்டன. இந்நிலையில் காரைக்கால் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 5 பழங்கால ஐம்பொன் சிலைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து இந்த கடத்தல் சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் விரிவான விசாரணை மேற்கொண்டார்.
செய்தியாளர்கள் சந்திப்பு: டி.ஐ.ஜி தகவல்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநில டி.ஐ.ஜி. சத்யா சுந்தரம் கூறியதாவது: "காரைக்கால் தனிப்படை போலீசார் மிகவும் துரிதமாகவும், சாதுரியமாகவும் செயல்பட்டு இந்த 5 ஐம்பொன் சிலைகளையும் மீட்டுள்ளனர். முதற்கட்ட ஆய்வுகளின்படி, மீட்கப்பட்ட இந்த சிலைகள் அனைத்தும் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து சிலைகளாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொல்லியல் துறைக்கு (Archaeology Department) முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் துறையின் வல்லுநர்கள் ஆய்வு செய்த பின்னரே, இந்த சிலைகள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை மற்றும் இவற்றின் தொன்மை மதிப்பு என்ன என்பது போன்ற முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.
ஒருவருக்கு தீவிர வலைவீச்சு
மேலும், இந்த சிலை கடத்தல் வழக்கு குறித்துப் பேசிய அவர், இச்சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு முக்கிய குற்றவாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கும்பலின் பின்னணியில் உள்ள மேலும் ஒருவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடி வருவதாகக் குறிப்பிட்டார்.
சரியான நேரத்தில் தகவலைப் பெற்று, பல கோடி ரூபாய் மதிப்புள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிலைகள் அண்டை நாட்டிற்கு கடத்தப்படுவதைத் தடுத்த காரைக்கால் போலீசாரின் துரித நடவடிக்கையை டி.ஐ.ஜி. வெகுவாகப் பாராட்டினார்.
