காரைக்கால் நிரவி பகுதியில் ரூ.1 லட்சம் மதிப்புலான கஞ்சாவுடன் இளைஞர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காரைக்கால் மாவட்டம் நிரவி பகுதியில் நிரவி காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது விழிதியூர் சாலையில் மதகு ஒன்றில் கஞ்சா புகைத்து கொண்டு இருந்த இளைஞரை விசாரித்தனர். அப்போது அவரிடம் விற்பதற்காக ரூபாய் 2500 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அந்த இளைஞரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் காரைக்கால் மாவட்டம் தலத்தெரு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஷ்ணுபிரியன் என்பதும் நீண்ட நாட்களாக அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் ரஜினிசக்தி என்பவருடன் இணைந்து கஞ்சா பொட்டலங்களை தமிழக பகுதியில் இருந்து வாங்கி காரைக்கால், மயிலாடுதுறை, திருக்கடையூர், பொறையார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறுவர்களுக்கு விற்பதாகவும் ஒப்புக்கொண்டார்.
இதனை அடுத்து ரஜினிசக்தியின் வீட்டுக்கு சென்று சோதனை செய்த போலீசார் ஒன்றரை லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதை அடுத்து விஷ்ணு பிரியின் மீது வழக்கு பதிவு செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புதுச்சேரி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரஜினிசக்தி என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இளைய சமுதாயத்தை சீரழிக்கும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்