தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸை சொகுசு காரில் கடத்தி வந்து சட்ட விரோத விற்பனையில் ஈடுபட முயன்ற 5 வாலிபர்களை கைது செய்த தனிப்படை போலீசார், அவர்களிடம் இருந்து 12 கிலோ ஆம்பர் கிரீஸ், சொகுசு கார், செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் பலரும் என்றாவது ஒருநாள் சட்டத்தின் பிடியில் சிக்குவார்கள் என்பது வரலாறு , அப்படி அதிக லாபத்திற்காக செய்யும் பல சட்டவிரோத செயல்களில் கடத்தல் மிக முக்கியம் வாய்ந்தது, இந்திய அளவில் தற்போது அதிக அளவில் கடத்தப்படும் பொருளாக திமிங்கல உமிழ் நீர் (ஆம்பர் கிரீஸ் ) உள்ளது. இது வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுவதாக கூறப்படுகிறது. 20 வயதுக்கு மேல் உள்ள திமிங்கலங்கள், உடலில் இருந்து உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருளை வாய் வழியாக உமிழும். இதுவே, ஆம்பர் கிரீஸ். கடலில் மிதக்கும் தன்மை கொண்ட ஆம்பர் கிரீஸ் உயர்தர நறுமணப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. துபாய் உள்ளிட்ட நாடுகளில் நறுமணப் பொருட்கள் தயாரிப்புக்கு ஆம்பர் கிரீஸ் பயன்படுத்தப்படுகிறது.
எகிப்தியர்கள் பழங்காலத்தில் மருந்துப் பொருளாக இதை பயன்படுத்தியுள்ளனர். இந்தியாவில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கள்ள சந்தையில் இந்த பொருளுக்கு அதிக மவுசு உள்ளதால் இது அடிக்கடி கடத்தப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா போதை பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கவும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சணல்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சணல்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் குளச்சல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர் வலையில் சிக்கிய விற்பனைக்கு தடை செய்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் ஆன "ஆம்பர் கிரீஸ்" என்ற பொருளை காரில் கடத்தி சென்று சட்ட விரோதமாக விற்பனை செய்ய சிலர் முயற்சி செய்து வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தனிப்படை போலீசார் குளச்சல் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் சொகுசு காரில் வந்த 5 வாலிபர்களை மடக்கி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசிய நிலையில் 5 வாலிபர்களையும் சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனங்களையும் குளச்சல் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர்கள் குளச்சல் பகுதியை சேர்ந்த டேனியல், மண்டைக்காடு பகுதியை சேர்ந்த அரவிந்த், உதயமார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த பிபின், திக்கணம்கோடு பகுதியை சேர்ந்த ஜெனித் மற்றும் அஜித் என்பதும் தெரியவந்தது.
மேலும், வாலிபர்கள் 5 பேரும் தடை செய்யப்பட்ட சர்வதேச சந்தையில் சுமார் 12 கோடி ரூபாய் வரை விலை போகும் 12 கிலோ திமிங்கல உமிழ்நீர் "ஆம்பர் கிரீஸ்" ஐ சொகுசு காரில் பதுக்கி கேரளாவிற்கு கடத்தி சென்று சட்ட விரோதமாக விற்பனை செய்ய சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து வாலிபர்கள் 5 பேரையும் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் இருந்த 12 கோடி ரூபாய் மதிப்பிலான 12 கிலோ ஆம்பர் கிரீஸ் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார், இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை குலசேகரம் வனச்சரக அலுவலர் விஜயகுமாரிடம் ஒப்படைத்தனர்
இதனையடுத்து வாலிபர்கள் 5 பேர் மீதும் தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸ் ஐ சட்ட விரோதமாக கடத்தி விற்க முயன்றதாக வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் அவர்களை நீமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்