கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர், அருகில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது தோழி ஒருவருடன் இணைந்து ஆன்லைன் வகுப்பில் படித்து வந்துள்ளார்.
அப்போது தனது தோழியின் மூலம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த பூ கடை வியாபாரி அபினேஷ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் நட்பாக பழகி, தொடர்ந்து மணி கணக்கில் செல்போனில் பேசியும் வந்துள்ளனர்.
நட்பாக தொடங்கிய இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற, இந்த ஜோடி கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தொடர்ச்சியாக காதலை வளர்க்க, பல்வேறு இடங்களுக்கு சென்று இருவரும் ஜோடியாக செல்பி புகைப்படமும் எடுத்துள்ளனர்.
இந்த நிலையில், எங்கே நாம் காதலி நம்மைவிட்டு சென்றுவிடுவார் என்ற பயத்தில் என்று காதலன் அபினேஷ் ஒரு முடிவுக்கு வந்துள்ளார். அதன்படி, தனது பெயரை நெஞ்சில் பச்சை குத்த வேண்டும், அப்போது தான் நீ உண்மையாக காதலிக்கிறாய் என நம்புவேன் என்று அந்த மாணவியை கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவி பச்சை குத்த மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபினேஷ், ஒருகட்டத்தில் செல்போனில் நாம் பேசிய வாய்ஸ் ரெக்கார்ட், ஜோடியாக எடுத்த செல்பி புகைப்படங்கள் அனைத்தையும் உன் பெற்றோர் மற்றும் அனைவருக்கும் காண்பித்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து, மிரட்டல் வந்தும் பயப்படாத மாணவி, அபினேஷுடன் தனக்கு இருந்த காதலை பிரேக் அப் செய்துள்ளார். மேலும் கோவமடைந்த அபினேஷ் மாணவியின் பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகாத வார்ததைகளை பேசியதோடு மாணவியை தொடர்பு கொண்டு உன்னை இனிமேல் வாழ விடமாட்டேன் என மிரட்டியுள்ளார்.
ஒரு கட்டத்தில் மாணவியின் வீட்டிற்கே நேரடியாக சென்றும் தகராறு செய்ததால் மாணவியின் தந்தை இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குபதிவு செய்த காவல்துறையினர் காதலன் அபினேஷை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து அதில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வாய்ஸ் ரெக்கார்ட்டை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்