கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குளச்சல், கருங்கல், நித்திரவிளை, வெள்ளிச்சந்தை, கொல்லங்கோடு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஏ.டிஎம். கொள்ளை, விலையுயர்ந்த செல்போன்கள் திருட்டு, நகைக் கொள்ளை என தொடர்ந்து அரங்கேறியுள்ளது. 


திருட்டு சம்பவங்கள் அரங்கேறிய பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, கருப்புக் குடைகளை பிடித்தவாறு 2 பேர் ஜோக்கர் முகமூடிகளுடன் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டு இருந்ததும், இவர்கள் தான் அனைத்து பகுதிகளிலும் தங்கள் கைவரிசைகளை காட்டியும் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. 


இதையடுத்து, இந்த ஜோக்கர் முகமூடி நபர்களை பிடிக்க குளச்சல் டி.எஸ்.பி தங்கராமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் ஈடுப்பட்டனர். இந்தநிலையில், அந்த திருடர்கள் சாலையிலுள்ள ஏதாவது ஒரு சிசிடிவி கேமரக்களைப் பார்த்துவிட்டால் "வில்லன்" திரைப்படத்தில் வரும் அஜித் கதாப்பாத்திரத்தைப் போல கால்களைத் தாங்கி தாங்கி நடந்துள்ளனர். 


3 மாதங்களுக்கும் மேலாக தனிப்படை காவல்துறையினரிடம் சிக்காமல் ஜோக்கர் முகமூடி ஜோடி தண்ணி காட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு கொல்லங்கோடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞன் ஒருவனை மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். 


அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் வள்ளவிளை பகுதியைச் சேர்ந்த ஷலால் கஸ்பாஸ் என்பதும் தனிப்படை தேடி வந்த ஜோக்கர் ஜோடி திருடர்களில் இவனும் ஒருவன் என்பதும் தெரியவந்தது. அவனோடு சேர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவன் தூத்தூர் பகுதியை சேர்ந்த ஜிம்சன் என்ற தகவலையும் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். 


திருடியதற்கான காரணம் : 


ஷலால் கஸ்பாஸும், ஜிம்சனும் நெருங்கிய நண்பர்கள்.  தன் நண்பன் ஜிம்சனுக்காக எதையும் செய்யத் துணிந்தவனாக இருந்திருக்கிறான் ஷலால் கஸ்பாஸ். முன்னதாக, ஜிம்சன் அழிக்கால் என்ற பகுதியை சேர்ந்த உறவுக்காற பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளான்.


தொடக்கத்தில் அவனது காதலை ஏற்றுக்கொண்ட அந்தப் பெண், ஜிம்சன் வசதி குறைந்தவன் என்பதைத் தெரிந்துகொண்டு அவனை விட்டு பிரிந்து தனது உறவுக்கார இளைஞனை ஒருவரை காதலிக்கத் தொடங்கியுள்ளார்.


இதை அறிந்து ஆத்திரமடைந்த ஷலால் கஸ்பாஸ் நண்பர் ஜிம்சனுடன் சேர்ந்து அந்த உறவுக்காற இளைஞனின் இருசக்கர வாகனத்தை இரவோடு இரவாக தீ வைத்து எரித்துள்ளான். தொடர்ந்து வசதி குறைந்தவனாக இருப்பதால் காதலை நிராகரித்த காதலி முன்பு கார், பங்களா என வசதியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என முடிவு செய்துள்ளனர். 


இதன் காரணமாக இருவரும் தனித்தனி பைக்குகளில் ஒரே இடத்திற்கு சென்று கொள்ளையில் ஈடுபட்டும், கொள்ளையடித்த பொருட்களை கொல்லங்கோடு பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் புதுக்கி வைத்து விட்டு கேரளாவில் தலைமறைவாகியும் இருந்துள்ளனர். 


கைது செய்யப்பட்ட லால் கஸ்பாஸிடம் இருந்து மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள், 22 சவரன் தங்க நகைகள் மற்றும் விலையுயர்ந்த 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கூட்டாளி ஜிம்சனையும் போலீசார் தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண