கன்னடத் திரையுலகில் திடீர் மரணங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, சஞ்சாரி விஜயின் மரணங்கள் வரிசையில் கன்னட சின்னத்திரை நடிகை சௌஜன்யாவின் தற்கொலை அங்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பெங்களூருவின் கும்பல்கோட் பகுதியில் தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அண்மையில்தான் கன்னட சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ ராமய்யா தற்கொலை செய்துகொண்டார் மற்றும் இன்னொரு நடிகையான சைத்ரா கட்டூர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். என்பது குறிப்பிடத்தக்கது.  அவர்கள் வரிசையில் தற்போது சௌஜன்யாவின் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.தற்கொலை செய்துகொண்டுள்ள சௌஜன்யாவின் வயது 25. 


கும்பல்கோட்டில் உள்ள தனது அறையில் பிணமாக சௌஜன்யா தொங்கிக் கொண்டிருந்த நிலையில் காவல்துறையினர் கதவை உடைத்து உடலை மீட்டுள்ளனர். அவரது காலில் இருந்த டாட்டூவை வைத்து அவர்தான் சௌஜன்யா என அடையாளம் கண்டுள்ளனர் போலீசார்.






சௌஜன்யாவின் தற்கொலைகுறித்து முதற்கட்ட விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் போலீசார் சௌஜன்யாவின் அறையில் ஒரு கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர். அதில் ‘தனது இந்த முடிவுக்குக் காரணம் முழுக்க முழுக்க தான் மட்டும்தான் என்றும் வேறு யாரும் காரணம் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பெற்றோருக்கு நன்றி தெரிவித்து மன்னிப்பும் கோரியுள்ளார். தான் வாழ்க்கையில் இதுவரை எதிர்கொண்ட சில விஷயங்கள்தான் தன்னை இந்த முடிவை எடுக்க வைத்ததாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  இதையடுத்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் அவரது பெற்றோர், நண்பர்கள் மற்றும் உதவியாளர்களிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பி வருகின்றனர். சௌஜன்யா சில சீரியல்களிலும் இரண்டு திரைப்படங்களிலும் நடித்தவர். அண்மையில்தான் கன்னட நடிகை ஜெயஸ்ரீ ராமய்யா மனநலச்சிக்கல் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். பிக்பாஸ் கன்னடா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சைத்ரா கட்டூர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 


கன்னடத்திரையுலகில் வாய்ப்புகள் குறைந்து வருவதால்தான் நடிகர்கள் இதுபோன்று உயிரைப் போக்கிக் கொள்ளும் முடிவை எடுப்பதாக கூறப்படுகிறது. சௌஜன்யாவும் வாய்ப்பு குறைந்ததால்தான் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.


தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050