ஊராட்சி மன்ற தலைவரின் மகன் கொலை வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமனில் வெளிவந்த பாமக பிரமுகர் தனக்கும் தனது குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாக வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் (Kanchipuram News): காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் டோம்னிக் (53). திமுக பிரமுகர். இவரது மனைவி குமுதா ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர்களது மகன் ஆல்பர்ட் (28) சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் ஸ்கிராப் எடுக்கும் தொழில் செய்து வந்தார்.
தொழில் போட்டி
இந்தநிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் சுரேஷுக்கும் ஆல்பர்ட்டுக்கும் ஸ்கிராப் எடுப்பதில் தொழில் போட்டி ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. கடந்தாண்டு எட்டாம் மாதம் வல்லம் சிப்காட்டில் இருந்த ஆல்பர்ட்டை மர்ம கும்பல் ஒன்று நாட்டு வெடிகுண்டு வீசி சரமாரியாக கத்தியால் வெட்டி கொலை செய்தது.
பிரபல ரவுடி மணியின் கூட்டாளிகள்
இந்த கொலை வழக்கில் எச்சூர் பகுதியை சேர்ந்த சுரேஷ், தாம்பரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி மணியின் கூட்டாளிகள் மாதவன், செந்தில்குமார் அஸ்வின் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேஷ் நிபந்தனை ஜாமினில் கடந்த இரண்டாம் தேதி வெளியே வந்தார்.
ஆல்பர்ட்டின் கூட்டாளிகள்
இதனை அறிந்த ஆல்பர்ட்டின் தந்தை டோம்னிக் சுரேஷை பழிக்கு பழியாக கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. திருவள்ளூர் அடுத்த கோட்டையூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரிடம் சுரேஷை கொலை செய்ய ரூ.15 லட்சம் பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சுங்குவார்சத்திரம் போலீசார் டோம்னிக், அவரது கார் ஓட்டுநர் தேவன், கூலிப்படை தலைவன் முருகன், கட்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த நவீன், ஆல்பர்ட்டின் கூட்டாளிகள் உட்பட பத்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கொலை செய்ய முயற்சி
இதற்கிடையே நிபந்தனை ஜாமினில் வெளியே வந்து தலைமறைவாக உள்ள சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்னை டோம்னிக் திட்டம் போட்டு கொலை செய்ய முயற்சி செய்து வருகிறார், ஆல்பர்ட் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் வெளியே உள்ளனர். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் டோம்னிக் மூலம் ஆபத்து உள்ளது. தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஏதேனும் அசம்பாவிதம் நேரிட்டால் டோம்னிக் , அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் மோகன்தாஸ், திமுக பிரமுகர் போஸ்கோ தான் காரணம் என குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது
தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே பிணையில் வந்த சுரேஷ் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாததால் தலைமறைவாக உள்ள சுரேசை போலீசார் தீவிரமாக தேடி வருவது குறிப்பிடத்தக்கது.