காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்காக கடந்த 2019-ம் ஆண்டில்  ஸ்ரீபெரும்புதுார் அருகில் உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும்போது, போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு, 20.52 கோடி ரூபாய் வழங்கியதாக புகார் எழுந்தது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்து சம்பந்தப்பட்ட, அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.


வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை மீறி 


இவ்வழக்கே  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரையில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராகவும் உள்ள நர்மதா நேரில் ஆஜரானார். இந்த வழக்கில் நர்மதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை பரிசீலனை செய்த நீதிபதி, உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது தெரிந்தும், இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை மீறி உள்ளதாக கருதுவதற்கு ஆரம்ப முகாந்திரம் உள்ளது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.


மேலும், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ், ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு, முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் அதிகாரி நர்மதா விளக்கம் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டார். இதையடுத்து, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி, நர்மதா மனுத் தாக்கல் செய்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ், அதிகாரி நர்மதா தண்டிக்கப்பட வேண்டியவர். அவருக்கு, ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்படு கிறது என்று உத்தரவு பிறப்பித்தார்.


நீதிபதி உத்தரவில் இருப்பது என்ன ?


 நீதிமன்ற உத்தரவை முறையாக புரிந்து கொள்ளவில்லை தவறுதலாக கருதி விட்டதாக, நர்மதா தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதில், எந்த அடிப்படையும் இல்லை. மாவட்ட வருவாய் அதிகாரி பொறுப்பில், ஐந்து ஆண்டுகளாக இருந்துள்ளார். சாதாரணமாக, ஒரே பதவியில் ஐந்து ஆண்டுகளாக ஒரு அதிகாரியை பணியாற்ற அனுமதிப்பது இல்லை. நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து முழுமையாக நர்மதாவுக்கு தெரியும் என்பதால், தற்போது தனக்கு தெரியாது என அவர் கோர முடியாது.


அரசு அதிகாரிகள், நிர்வாகத்தின் அங்கம். நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை மீறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியவர்கள். அவர் கோரிய நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்றுக் கொண்டால், அது ஒரு மோசமான முன்னுதாரணமாகி விடும். எனவே, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ், அதிகாரி நர்மதா தண்டிக்கப்பட வேண்டியவர். அவருக்கு, ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார். இதனால், தான் கைது செய்யப்படலாம் என அறிந்த நர்மதா ஆந்திராவில் ஓராண்டாக தலைமறைவாக இருந்து வந்தார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார், தலைமறைவாக இருந்த நர்மதாவை கைது செய்தனர். மேலும், நர்மதாவுக்கு உதவிய அவரது சகோதரியையும் கைது செய்தனர்