காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காலண்டர் தெரு பகுதியில் வசித்து வந்தவர் கஸ்தூரி (61). கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக, முறைப்படி விவாகரத்து பெற்றுள்ளார். காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில், கஸ்தூரி காவல் ஆய்வாளராக பணியாற்றியுள்ளார். ஓய்வு பெற்ற கஸ்தூரி கடந்த சில ஆண்டுகளாக காஞ்சிபுரத்தில் தங்கியிருந்து, வட்டிக்கு விடுவது, சீட்டு நடத்துவது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலம்
கஸ்தூரியின் மகன் தற்பொழுது டேராடூன் பகுதியில் தங்கி வேலைக்கு பார்த்து வருகிறார். இதனால் கஸ்தூரி காஞ்சிபுரத்தில், தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் மகன் பலமுறை போன் செய்தும் கஸ்தூரி எடுக்காமல் இருந்துள்ளார். கஸ்தூரி தங்கியிருந்த வீட்டில், துர்நாற்றம் வரவே அக்கம் பக்கத்தினர் உடனடியாக, இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து பார்த்த பொழுது கஸ்தூரி சடலமாக இருந்துள்ளார்.
உடனடியாக சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்டமாக போலீசார் இச்சம்பவம் குறித்து, மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். உடலில் தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், காயம் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மரணத்தில் எழுந்த சந்தேகம்
மருத்துவர்களிடம் இந்த தகவல்களை உறுதிப்படுத்திய காவல்துறையினர் உயிரிழந்த கஸ்தூரியின், தொலைபேசியை கைப்பற்றி விசாரணையை துவங்கினர். காவல்துறை நடத்திய விசாரணையில் குறிப்பிட்ட நபர்களிடம் நீண்ட நேரம் தொலைபேசியில் கஸ்தூரி பேசியதும், காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்படுத்தியது. மேலும் அவர் வீட்டு அருகே இருக்கும் சிசிடிவி காட்சிகளையும், கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கஸ்தூரியின் மகன் இதுகுறித்து புகார் அளிக்கவே , போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர்.
சிக்கிய மதிமுக மாவட்ட செயலாளர்
மறுபுறம் கஸ்தூரியின் ஈமச்சடங்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடந்தேறின. தற்பொழுது கஸ்தூரி வசித்து வரும் வீடு மதிப்பு, சுமார் 2 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் என கூறப்படுகிறது. இந்த வீட்டை விற்கும் முயற்சியில் கஸ்தூரி ஈடுபட்டு வந்ததாகவும், விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தநிலையை கஸ்தூரியின் 10 ஆண்டுகால நண்பராக இருக்கக்கூடிய, மதிமுகவின் மாவட்ட செயலாளர் வளையாபதி காவல்துறையினரால், இந்த வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.
போலீசார் மீது பல்வேறு புகார்
இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக பிரபு என்கிற மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது பிரபு மற்றும் வளையாபதி ஆகிய இருவரின் காவல்துறையினர் தாக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக காவல்துறை சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பினர், கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.
வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இது தொடர்பாக ஜாமினில் வெளியில் உள்ள வளையாபதி இடம் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து பிரபுவிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.