சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு வகையான போதை பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கஞ்சா, போதை மாத்திரைகள் பயன்பாடு அதிகரித்து வருவதால் காவல்துறையினருக்கு தலைவலி ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்தாலும் பல்வேறு வகையில் போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு, போதை பொருட்கள் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.


ஸ்ரீபெரும்புதூரில் சோதனை


அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள, சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதூர் டோல்கேட் அருகே கடந்த நவம்பர் மாதம் 27-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.


அப்போது ஹோண்டா ஆக்டிவா வாகனத்தில் வந்த இருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக இருவரை பிடித்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இரண்டு பேரும் முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்ததால் போலீசார் சந்தேகம் அடைந்தனர்.


பிடிபட்ட போதை மாத்திரைகள்


போலீசாருக்கு தொடர்ந்து சந்தேகம் வரவே உடனடியாக இருவரையும் மற்றும் அவர்களது இரு சக்கர வாகனத்தையும், சோதனை மேற்கொண்டனர். இருவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர்களிடம் போதை மாத்திரை இருப்பது தெரியவந்தது. இரண்டு நபர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


இரண்டு நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இருவரும் கல்லூரி மாணவர்கள் என்பதால் போலீசார் மேலும் அதிர்ச்சி அடைந்தார்.


கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை கிடைத்தது எப்படி ?


ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான சேர்ந்த மெடரமிட்யா மேசுவர்தன், முங்கரா விரவன் குமார் 22, ஆகிய இருவரை ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டனர். ஸ்ரீபெரும்புதூர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இண்டியா மார்ட் எனும் ஆன்லைன் வேப்சைட் வாயிலாக, டைடாய் எனும் வலி நிவாரண மாத்திரைகளை கொரியரில் வாங்கி, போதை மாத்திரையாக பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. 


இந்தியா முழுவதும் ஆன்லைன் டெலிவரி


இந்த மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து அதன் பின்னர் ஊசி வழியாக உடலில் ஏற்றிக் கொண்டதும் தெரிய வந்தது. ஆன்லைன் மூலம் மாத்திரை கிடைப்பது அறிந்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட முக்கிய நபரை கைது செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, கல்லூரி மாணவர்கள் அளித்த தகவலின் பெயரில் கொரியர் டெலிவரி செய்யப்பட்ட முகவரியை வைத்து, மும்பையில் இருந்து போதை மாத்திரை சப்ளை செய்த சதானந்த் பாண்டே என்பவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். 


ஸ்ரீபெரும்புதூர் போலீசார் அதிரடி


இதனை அடுத்து தனிப்படை போலீசார் மும்பை சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். திட்டமிட்டு ஸ்ரீபெரும்புதூர் போலிலார் நேற்று முன்தினம் மும்பையில் போதை மாத்திரை சப்ளை செய்த நபரை கைது செய்தனர். கொரியர் வாயிலாக நாடு முழுதும் போதை மாந்திரை சப்ளை செய்து வந்ததாக போலீசார் விசாரணையில் போலீசார் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தியா முழுவதும் போதை மாத்திரை சப்ளை செய்த முக்கிய நபரை, ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கைது செய்ததை தொடர்ந்து அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.