கள்ளக்குறிச்சி மாவட்டம், கோமுகி ஆற்றின் கரையோரம் ஒரே பள்ளியில் பண்ணிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த மாணவரும் மாணவியும் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், குதிரைசந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மாணவன் மற்றும் மாணவி இருவரும் அதே ஊரிலுள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த நவம்பர் 20ம்தேதி மாலை சுமார் 7 மணியளவில் கடைக்குச் சென்று வருவதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்ற மாணவி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதனால் அவரின் பெற்றோர் கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் 21ம் தேதி புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், மாயமான மாணவியைத் தேடிவந்தனர். இதற்கிடையே இன்று கள்ளக்குறிச்சியை அடுத்த சோமண்டார்குடி பகுதியில் கோமுகி ஆற்றின் கரையோரமாக இளம் பெண்ணின் சடலமும், அதற்கு அருகில் வேப்பமரத்தில் இளைஞர் ஒருவர் சடலமாகத் தூக்கில் தொங்குவதாகவும் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்லால், கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராஜலட்சுமி, கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர்கள் பாரதி, ஆனந்தராஜ் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் ஆற்றில் சடலமாக மிதந்த உடல் மாயமான மாணவி என்பது தெரியவந்தது. அதேபோல வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கியவர் குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் என்பதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் இருவரும் அந்தப் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இரண்டு சடலங்களையும் மீட்ட போலீஸார் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, இறந்து போன மாணவியின் தாய், இறந்து போன மாணவனின் தாத்தா ஆகியோரிடம் புகாரைப் பெற்று கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முதற் கட்ட விசாரணை குறித்து நம்மிடம் கூறிய விசாரணை அதிகாரிகள், உயிரிழந்த இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்து வந்திருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது. வெவ்வேறு சமூகம் என்பதால் தங்கள் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிப்பார்களா என்ற குழப்பத்தில் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. உயிரிழந்த மாணவர் இரண்டு நாள்களுக்கு முன்பு தனது சக மாணவர் ஒருவரிடம் காதல் விவகாரத்தால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் தான் இந்தச் சம்பவம் நடைப்பெற்றிருக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் உண்மையான காரணம் தெரியவரும் என்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்