கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் அவரது இரண்டு பெண் குழந்தைகளை பாம்பு கடித்ததில், 2 மற்றும் 4 வயதுடைய சிறுமிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு கடித்ததில் பாதிக்கப்பட்ட தாய் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய், குழந்தைகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த மூக்கனூர் கிராமத்தில் ஏரிக்கரையோரமாக புஷ்பா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு புஷ்பா தனது மகள்களான தேவதர்ஷினி (4), தேவஜனனி (2) ஆகியோருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது வீட்டிற்குள் புகுந்த பாம்பு, தூங்கிக்கொண்டிருந்த புஷ்பா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளையும் கடித்ததாகக் கூறப்படுகிறது. பாம்பு கடித்ததை உணர்ந்த புஷ்பா வலியால் அலறி கூச்சலிட்டுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்
புஷ்பாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் உடனடியாக அவரது வீட்டிற்கு விரைந்து சென்றனர். அங்கு பாம்பு கடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த புஷ்பா மற்றும் இரண்டு குழந்தைகளையும் மீட்டனர்.
இதையடுத்து, மூன்று பேரையும் உடனடியாக புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சை பலனின்றி 2 சிறுமிகள் உயிரிழப்பு
ஆனால், துரதிர்ஷ்டவசமாக பாம்பு கடித்ததில் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி தேவதர்ஷினி மற்றும் 2 வயது சிறுமி தேவஜனனி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். அடுத்தடுத்து இரண்டு பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மருத்துவமனை மற்றும் மூக்கனூர் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தாய் புஷ்பாவுக்கு தீவிர சிகிச்சை
இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த நிலையில், பாம்பு கடித்ததில் பாதிக்கப்பட்ட தாய் புஷ்பா மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒரே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் இரண்டு குழந்தைகளை பாம்பு கடித்ததில், இரண்டு பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
