கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த நபரிடம் தங்க நகை சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் சேர்ந்து ஏமாற்றமடைந்த நபர்கள் புகார் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

 தங்க நகை சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு லாபகரமான திட்டங்களில் முதலீடு செய்துள்ளதாக கூறி, ஏராளமான பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து மோசடி செய்ததாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் கென்னடி என்பவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு அறிவித்துள்ளது.

சேலம் மாவட்டம் அழகாபுரத்தைச் சேர்ந்த சவுந்தரராஜ் (69) என்பவர், விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். அதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் மைக்கேல்புரத்தைச் சேர்ந்த ஜான் கென்னடி (49) என்பவர், கடந்த 2023 அக்டோபர் 1 முதல் 2024 அக்டோபர் 1 வரையிலான காலகட்டத்தில், கள்ளக்குறிச்சி – திருவண்ணாமலை மெயின் ரோட்டில் உள்ள மேல்சிறுவள்ளூர் கூட்ரோட்டில் “பீனிக்ஸ் சூப்பர் மார்கெட்” என்ற பெயரில் கடை நடத்தி வந்தார் என கூறியுள்ளார்.

Continues below advertisement

இந்தக் கடையின் வாயிலாக அவர்,

  • தங்க சேமிப்பு திட்டம்
  • கார் மற்றும் நிலம் வாங்கும் திட்டம்
  • மளிகைப் பொருட்கள் இரட்டிப்பு திட்டம்
  • ஸ்டாக் பாயின்ட் திட்டம்
  • முதலீட்டிற்கு வெளிநாடு செல்லும் திட்டம்

என பல்வேறு போலி திட்டங்களை அறிமுகப்படுத்தி, விழுப்புரம், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, தேனி, கொடைக்கானல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து பணம் வசூல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஜான் கென்னடியை 2025ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கு தற்போது இறுதி கட்ட விசாரணையில் உள்ளது. வரும் 26ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் ஏமாற்றம் அடைந்த அனைத்து பாதிக்கப்பட்டவர்களும், தங்களிடம் உள்ள தொடர்புடைய ஆவணங்களுடன் சேர்த்து, விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவை நேரில் அணுகி புகார் மனு அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள், விழுப்புரம் மேற்கு, சண்முகாபுரம், சேர்மன் சண்முகம் தெரு, எண் 7 -ல் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு: 0414-250366 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

பொருளாதார குற்றப்பிரிவு (Economic Offences Wing - EOW) என்பது, அரசு அல்லது தனிநபர்களை பொருளாதார ரீதியாக ஏமாற்றும் வகையில் நடைபெறும் மோசடிகள் மற்றும் நிதி சம்பந்தப்பட்ட குற்றங்களை விசாரிக்கும் ஒரு சிறப்பு காவல் துறை பிரிவாகும்.

பொருளாதார குற்றப்பிரிவின் முக்கிய பணிகள்:

  • நிதி மோசடிகள் (Financial frauds)
  • பண மோசடி மற்றும் சேமிப்பு நிறுவன மோசடிகள்
  • வங்கிக் கடன் மோசடிகள்
  • தள்ளுபடி வாக்குறுதி மோசடிகள் (Ponzi schemes)
  • நம்பிக்கை முறையை துஷ்பயன்படுத்தி நிதி வசூல் செய்தல் (Cheating through trust schemes)
  • நகைச்சுவை முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் இரட்டை பணித் திட்டங்கள்
  • நிஜ எஸ்டேட் (Real Estate) மோசடி
  • வாடகைக் கடன் மோசடி, பாங்க் காகித மோசடி உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.

பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் ஏமாற்றப்படாமல் பாதுகாக்க, குற்றவாளிகளை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க, மற்றும் நிதி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது.