கள்ளக்குறிச்சியில் தொடரும் விஷச்சாராயம் உயிரிழப்பு


கள்ளக்குறிச்சி பகுதியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்ததில் இதுவரை 132 நபர்கள் பாதிப்படைந்துள்ளனர். தற்பொழுது 93 நபர்கள் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை விஷச்சாராயம் குடித்து 39 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 46 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 17 பேரும், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் ஒருவர் என 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 



இதுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 பேரும், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மூன்று பேரும், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 08 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் நான்கு பேரும் மொத்தம் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 


உடற்கூறாய்வு -சிக்கல்


ஒரே நேரத்தில் நிறைய பேர் உயிரிழந்திருப்பதால் உடற்கூறாய்வு செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு இறந்தவர்களின் உடல்களை உடற்கூறு ஆய்வு செய்ய பிற மாவட்டங்களில் இருந்து மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்த பாதிப்படைந்த நபர்களுக்கு டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இன்று மதியம் 12 மணி வரை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


எஃப் ஐ ஆர் - இல் இருப்பது என்ன ?


கடந்த 18ஆம் தேதி இரவு 7 மணிக்கு கருணாபுரம் சுடுகாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாகவும், 19ஆம் தேதி காலை சேகருக்கு வயிற்றுவலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதாகவும், இவரை தொடர்ந்து 20 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தை கண்ணுக்குட்டி, தம்பி தாமோதரன், கண்ணுக்குட்டியின் மனைவி விஜயா விற்றுள்ளனர். இது தொடர்பாக 304(2), 328, உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றம் செய்யும் நோக்கத்துடன் விஷம் போன்ற பொருட்களால் காயம் ஏற்படுத்துதல் பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.




மேலும் முதல் தகவல் அறிக்கையில் முன் கன்னுக்குட்டி, பிரவீன் குமார், மற்றும் விஜய் ஆகிய மூன்று பேரிடம் சாராயம் வாங்கி குடித்த எங்கள் பகுதியை சேர்ந்த மகேஷ் கண்ணன் மற்றும் இருவதற்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்ததின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.