வாலாஜாபாத் அருகே ஊத்துக்காடு கிராமத்தில் வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த கால்நடைகளை அழைத்து வர சென்ற இளைஞர் இடிதாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.


 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்காவிற்கு உட்பட்ட ஊத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன், இவரது மகன் தினேஷ்குமார், பட்டதாரி இளைஞர். நேற்று மாலையில் வாலாஜாபாத் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில் வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த கால்நடைகளை அழைத்து வர தினேஷ் குமார் வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென மின்னல் தாக்கி உள்ளது. மின்னல் தாக்கியதில் தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 



இந்நிலையில் இடி தாக்கிய வயல்வெளியின் அருகே வேறெரு பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த ஊத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த செளந்தரராஜனின் மகள் ரஞ்சனா என்ற சிறுமியும் மின்னல் தாக்கியதில் காயமடைந்து மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த சிறுமியை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதல் உதவி சிகிச்சை அளித்து,மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 



ஒரே கிராமத்தில் நடைபெற்றுள்ள இரு வேறு சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்து சென்ற  வாலாஜாபாத் போலீசார் உயிரிழந்த தினேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

மழை நீரில் மூழ்கி இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு

 

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம்,பல்லாவரம்,ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழையானது பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் ஐய்யஞ்சேரி நேதாஜி நகர் பகுதியில் வசித்து வருபவர் சத்யராஜ் மணிமாலா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சத்யராஜ் வேலைக்கு சென்று இருக்க அவரது மனைவியும் வேலை முடித்துவிட்டு களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர்களது வீட்டில் வெளியே விளையாடிக் கொண்டிருந்த அவர்களது 2 வயது மகள் ஷாலினி  மாயமானார்.

 



அவர்களது வீட்டு வெளியே குடிநீர் தண்ணீர்காக கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் மழை நீர் தேங்கி இருந்துள்ளது. அதில் ஷாலினி உடல் பிரேதமாக கண்டறியப்பட்டுள்ளது. அதனைக் கண்டு அவரது தாய் கதறி அழுது பின் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஷாலினியை தூக்கிச்சென்றார். ஷாலினியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இருந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். மேலும் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். துள்ளி குதித்து விளையாடி கொண்டிருந்த இரண்டு வயது சிறுமியின் உடல் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது