ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாமனார் வீட்டில் இருந்து வரதட்சணையாக பைக் வாங்கி தராததால் மனைவி முகத்தில் கணவர் ஆசிட் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பெண் கடுமையாக பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டம் நம்கும் பகுதியில் வசித்து வருபவர் அமீர் கான். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹினா பர்வீன் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் அதேபகுதியில் பெற்றோருடன் இல்லாமல் தனியாக வீடு எடுத்து வாடகைக்கு தங்கியுள்ளனர். 


இந்தநிலையில் கல்யாணம் ஆனது முதலே பைக் வாங்க வேண்டும் என்று மாமனார் வீட்டில் ரூ. 70 ஆயிரம் அமீர் கேட்டு வந்துள்ளார். தொடர்ந்து தனது மனைவி பர்வீனிடம் பணம் கேட்டு  வற்புறுத்தி, கொடுமைப்படுத்தியுள்ளார். 


வலிதாங்க முடியாத பர்வீன், கடந்த சனிக்கிழமை தனது தந்தை வீட்டிற்கு சென்று பணம் கேட்டுள்ளார். அதற்கு அவரது தந்தையும் பணத்தை விரைவில் ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து, நேற்று தனது வீட்டிற்கு வந்த பர்வீன், தந்தை வீட்டில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லியுள்ளார். 


இதனால் ஆத்திரமடைந்த அமீர் தனது மனைவி பர்வீனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் தொடர்ந்து பெரிய சண்டையாக உருவெடுக்க, வீட்டில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஆசிட்டை எடுத்த அமீர், தனது மனைவி பர்வீன் முகத்தில் ஊற்றியுள்ளர். வலி தாங்க முடியாத பர்வீன் சம்பவ இடத்திலேயே விழுந்து அலறி துடித்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அமீர் வீட்டில் இருந்து தப்பியோடிவிட்டார். 


சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கதினர் ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த பர்வீனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். முகம், கழுத்து, நெஞ்சு உள்பட பல்வேறு உடல்பாகங்களில் ஆசிட் பட்டதால் படுகாயமடைந்த பர்வீனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பர்வீனின் வாய்க்குள் ஆசிட் ஊற்றியதால் அவரால் பேச முடியவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 


பர்வீனின் தந்தை உதீனின் வாக்குமூலத்தின் பேரில் நாம்கும் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் அமீர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்.சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், நாம்கம் காவல் நிலைய போலீஸார் குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரித்தனர். அதே நேரத்தில், குற்றம் சாட்டப்பட்ட கணவரை போலீசார் தேட ஆரம்பித்துள்ளனர்.