ராஜஸ்தானில் 24 வயது பெண் ஒருவரும், அவரது சகோதரர் மகனான 14 வயது சிறுவனும் அதே குடும்பத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனைக் கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். 24 வயது பெண்ணும் அவரது சகோதரர் மகனும் தகாத உறவில் ஈடுபட்டதாகவும், அதனை கொல்லப்பட்ட 10 வயது சிறுவன் தவறுதலாக கண்டுபிடித்ததாலும் இந்தக் கொலைச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக இன்று ராஜஸ்தான் காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 


கொல்லப்பட்ட சிறுவனின் உடல் கடந்த 4 நாள்களுக்கு முன்பு, அப்பகுதியில் இருந்த பள்ளிக்கூடத்தின் நீர்த் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் 24 வயதான மீனா, மற்றோரு பதின்வயது சிறுவனையும் கைது செய்து, சிறுவனைச் சிறார் கூர்நோக்கு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். 


ஜெய்சல்மர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பன்வார் சிங் நதாவட் கடந்த பிப்ரவரி 10 அன்று ஜெய்சல்மர் மாவட்டத்தின் ஜின்ஜின்யாலி பகுதியில் வசித்து வரும் கைலாஷ் நாத் என்பவர் தன் மகன் ஹரிஷ் நாத்தைக்  காணவில்லை எனப் புகார் அளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.  



தொடர்ந்து அவர், தனது மகன் ஹரிஷ் நாத்தின் உடல் அந்த ஊரின் அருகில் உள்ள பள்ளிக்கூடத்தின் நீர்த் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், தனது மகன் கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் கொள்வதாகக் கூறியுள்ளார். தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சிறுவனின் கொலை வழக்கு மீதான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். காவல் கண்காணிப்பாளர் பன்வார் சிங் நதாவட் இந்த வழக்கு விசாரணைக்காகப் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். 


காவல்துறையினர் தனிப்படையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு ஆதாரங்கள் திரட்டப்பட்டு, அப்பகுதி மக்களிடையே விசாரித்துள்ளனர். இதில், அப்பகுதியைச் சேர்ந்த டாகா நாத் என்பவரின் மனைவி மீனா என்பவரையும், குற்றம் சாட்டப்பட்ட 14 வயது சிறுவனையும் விசாரணை நடத்தி, கேள்விகளை எழுப்பியுள்ளனர் காவல்துறையினர். 


இந்த விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 14 வயது சிறுவன் தனது உறவினரின் மகனான ஹரிஷைக் கொலை செய்து, அவரின் உடலைப் பள்ளிக்கூடத்தின் நீர்த் தொட்டியில் எறிந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். 



தொடர்ந்து, அவரும், அவரது உறவினரான மீனாவும் தகாத உறவு கொண்டிருந்ததாகவும், இருவரும் அந்தரங்கமாக இருந்த போது, அவர்களை ஹரிஷ் பார்த்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்த விவகாரம் வெளியில் கசிந்தால், பிரச்னைகள் நேரலாம் என்பதால் இருவரும் திட்டமிட்டு ஹரிஷைக் கொலை செய்ததாகவும் கூறியுள்ளார் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சிறுவன். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருவதாகவும், ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் காவல் கண்காணிப்பாளர் பன்வார் சிங் நதாவட் தெரிவித்துள்ளார். 


காவல் துணை கண்காணிப்பாளர் பிரியங்கா குமாவாத் இந்த வழக்கு குறித்து கூறிய போது, `கடந்த பிப்ரவரி 9 அன்று, மொத்த குடும்பமும் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றுள்ளனர். ஹரிஷ் தன்னுடைய குடும்பத்துடன் இருந்த போது, விரைவாக வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் அவரது உறவினர்களான மீனாவும், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சிறுவனும் உறவில் ஈடுபட்டிருந்ததைக் கண்டுள்ளார். கடந்த ஒரு ஆண்டாகவே, இருவரும் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஹரிஷை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்ற சிறுவன், அவரை மூச்சடைக்க செய்து கொலை செய்து, இரவில் வந்து உடலைத் தொட்டியில் எறிந்துள்ளார்’ எனக் கூறியுள்ளார்.