Indian US Murder:  இந்தியரின் தலையை துண்டித்து கொலை செய்த வழக்கில், யோர்டானிஸ் கோபோஸ் மார்டினெஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடூரமாக கொல்லப்பட்ட இந்தியர்

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் வாஷிங் மெஷின் தொடர்பான வாக்குவாதத்தில், இந்தியர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். மனைவி மற்றும் மகன் முன்பே கொல்லப்பட்டதோடு, அவரது தலையை தரையில் போட்டு உதைத்து விளையாடிய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வாஷிங்மெஷினால் வாக்குவாதம்

அமெரிக்காவில் வசித்து வந்த கர்நாடகாவைச் சேர்ந்த சந்திரமவுலி நாகமல்லையா (50),  டவுன்டவுன் டல்லாஸின் கிழக்கே சாமுவேல் பவுல்வர்டில் உள்ள டவுன்டவுன் சூட்ஸ் விடுதியில் பணியாற்றி வந்தார். அங்கேயே தனது மனைவி மற்றும் 18 வயது மகனுடன் சேர்ந்து வசித்தும் வந்தார். இந்நிலையில், விடுதியின் அறை ஒன்றை ஊழியர்களான கோபோஸ்-மார்டினெஸ் (37) மற்றும் ஒரு பெண் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது வாஷிங் மெஷின் உடைந்து இருப்பதாகவும், அதை பயன்படுத்த வேண்டாம் என்றும் சந்திரமவுலி வலியுறுத்தியுள்ளார். இந்த விஷயத்தை நேரடியாக கூறாமல், சக பெண் ஊழியரிடம் கூறி தன்னிடம் மொழி பெயர்க்க செய்த சந்திரமவுலியின் நடவடிக்கையால் கோபோஸ் ஆத்திரமடைந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை:

போலீசாரின் தகவல்களின்படி, வாக்குவாதம் நடைபெற்ற அறையில் இருந்து வெளியேறிய கோபோஸ், தன் வசம் வைத்திருந்த ஒரு வெட்டுக்கத்தியை கொண்டு வந்து சந்திரமவுலியை சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளார். காயமடைந்த அவர் தனது மனைவியும் மகனும் இருந்த மோட்டல் அலுவலகத்தை நோக்கி அலறியடித்துக் கொண்டு ஓடினார். அவர்கள் பலமுறை தாக்குதலை தடுக்க முயன்றுள்ளனர். ஆனால் கோபோஸ் அவர்களை தள்ளிவிட்டு தாக்குதலைத் தீவிரமாக தொடர்ந்துள்ளார். சந்திரமவுலியிடமிருந்த செல்போன் மற்றும் விடுதி அறைக்கான சாவி அட்டையை எடுத்துக்கொண்டு, அவரது தலை துண்டாகும் வரை கண்மூடித்தனமாக வெட்டியுள்ளார்.

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட தலை

பார்கிங் பகுதியில் வைத்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில், அதனை தரையில் போட்டு இரண்டு முறை உதைத்து தள்ளியுள்ளார். பின்பு அதனை கொண்டு சென்று குப்பைத் தொட்டிக்குள் போட்டுள்ளார். இதனிடையே, அருகிலிருந்தவர்கள் அளித்த புகாரின் பேரில்,  சம்பவ இடத்திற்கு வந்த டல்லாஸ் தீயணைப்பு மீட்புக் குழுவினர், கோபோஸ்-மார்டினெஸ் இன்னும் கத்தியை ஏந்தியபடி ரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு, போலீசார் வந்து அவரை கைது செய்யும் வரை தொடர்ந்து கண்காணித்தனர். விசாரணையின் போது, கோபோஸ்-மார்டினெஸ் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர் தற்போது டல்லாஸ் கவுண்டி சிறையில் மரண தண்டனைக்கான கொலைக் குற்றச்சாட்டில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கொலைக்கு வாக்குவாதம் மட்டுமே காரணமா? அல்லது திட்டமிடப்பட்டு இந்த கொலை நிகழ்த்தப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார்.

இந்திய தூதரகம் இரங்கல்:

சம்பவம் தொடர்பாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “டல்லாஸ், டெக்சாஸில் உள்ள தனது பணியிடத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட இந்திய குடிமகன் திரு. சந்திரா நாகமல்லையாவின் துயர மரணத்திற்கு ஹூஸ்டனில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இரங்கல் தெரிவிக்கிறது. நாங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம், மேலும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குகிறோம். குற்றம் சாட்டப்பட்டவர் டல்லாஸ் காவல்துறையின் காவலில் உள்ளார். இந்த விவகாரம் குறித்து நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.