USA India: இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத அமெரிக்கா? ரத்த வெள்ளம், தந்தை-மகள் கொடூரமாக சுட்டுக் கொலை..!
USA India Gun Shot: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

USA India Gun Shot: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியர்கள் சுட்டுக் கொலை:
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 56 வயதான ஒருவரும், அவரது 24 வயது மகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அங்கு தங்கி பயின்று வரும் இந்திய மாணவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடைபெறுவது இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தந்தை மற்றும் மகள் சுட்டுக் கொல்லப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
பிரதீப்குமார் படேலும் அவரது மகளும், அக்கோமாக் கவுண்டியில் லங்க்ஃபோர்டு நெடுஞ்சாலையில் உள்ள கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. அக்கோமாக் கவுண்டி வர்ஜீனியாவின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. மார்ச் 20 ஆம் தேதி அதிகாலை 5:30 மணிக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு அரங்கேறியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைய, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஒருவரை கண்டுள்ளனர். ஆனால், சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தொடர்ந்து கடை முழுவதும் தேடியதில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் அவதிப்படும் ஒரு பெண்ணை கண்டுள்ளனர். அவரை சென்டாரா நோர்போக் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
ஒருவர் கைது
துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒருவரை கைது செய்ததாக அக்கோமாக் கவுண்டி ஷெரிப்ஸ் தெரிவித்துள்ளார். ஓனான்காக்கைச் சேர்ந்த 44 வயதான ஜார்ஜ் ஃப்ரேசியர் டெவன் வார்டன் தற்போது பிணை இல்லாமல் அக்கோமாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது முதல் நிலை கொலை, முதல் நிலை கொலை முயற்சி, துப்பாக்கி வைத்திருந்தது மற்றும் குற்றச் செயலில் துப்பாக்கியைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. கருத்து மோதலால் சுட்டுக் கொல்லப்பட்டனரா? அல்லது இனவெறியால் சுட்டுக் கொல்லப்பட்டனரா? என பல்வேறு கேள்விகள் இந்த கொலைகளை சுற்றி எழுந்துள்ளன.
பலியானவர்கள் யார்?
சம்பவம் நடந்த கடையின் உரிமையாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பரேஷ் படேல், பாதிக்கப்பட்ட இருவரும் தனது குடும்ப உறுப்பினர்கள் என்று கூறியதாக வர்ஜீனியாவில் உள்ள WAVY-TV என்ற தொலைக்காட்சி நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், "என் உறவினரின் மனைவியும் அவளுடைய அப்பாவும் இன்று காலை வேலை செய்து கொண்டிருந்தனர், யாரோ ஒருவர் இங்கு வந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்," என்று பரேஷ் கூறியதாக தொலைக்காட்சி நிலையம் மேற்கோளிட்டுள்ளது.
குஜராத்தின் மெஹ்சானாவில் உள்ள கனோடா கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் மற்றும் அவரது மகள் ஊர்மி ஆகியோர் தான் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினர் கலக்கமடைந்துள்ளனர்.