திருச்சி மாவட்டம் தா.பேட்டை வடுகர்தெரு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் கனரா வங்கியில் கேஷியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். குழந்தை இல்லாததாலும், மனைவி இறந்ததாலும் முத்துசாமி தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை தா.பேட்டை அருகே வளையெடுப்பு கிராமத்தில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக முத்துசாமி மொபட்டில் சென்றார். பின்னர் மீண்டும் தா.பேட்டை நோக்கி மொபட்டில் வந்தார். அப்போது ஏரிக்கரை அருகில் சிறுநீர் கழிப்பதற்காக மொபட்டை நிறுத்தியபோது காரில் பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் 5 பேர் திடீரென முத்துசாமியின் கையையும், கண்களையும் துணியால் கட்டி காரில் ஏற்றி கடத்தி சென்றனர். மேலும் முத்துசாமியின் மொபட்டையும் மர்ம நபர்கள் ஓட்டி சென்றுள்ளனர். நேற்று முழுவதும் ஒரு அறையில் முத்துசாமியை அடைத்து வைத்து வீட்டின் பீரோ சாவியை கேட்டு கத்தியால் குத்தியும், தாக்கியும் மர்ம நபர்கள் சித்தரவதை செய்தனர். பின்னர் முத்துசாமியிடம் இருந்த வீட்டின் சாவியை பறித்த மர்மநபர்கள் நள்ளிரவில் முத்துசாமியின் வீட்டை திறந்து உள்ளே சென்றனர். வீட்டில் பீரோவில் இருந்த ரூ.12 லட்சம், 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையில், அந்த மர்ம நபர்கள் முத்துசாமியை துறையூர் அருகே சிக்கத்தம்பூர் பகுதியில் இறக்கிவிட்டு, விட்டு யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். மர்ம நபர்கள் தாக்கியதில் காயம் அடைந்த முத்துசாமி தா.பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். பின்னர் அவர் நடந்த சம்பவம் குறித்து தா.பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் முசிறி துணை காவல்துறை சூப்பிரண்டு அருள்மணி, இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, ஜெம்புநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். திருச்சியில் இருந்து மோப்பநாய் லாலி வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் கைரேகை, தடயங்களை சேகரித்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து ஜெம்புநாதபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மர்மகும்பலை தேடி வருகின்றனர். மேலும் முத்துசாமி தெரிவித்த மர்மநபர்களின் அடையாளத்தை வைத்து, அவர்கள் குறித்து புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஓய்வுபெற்ற வங்கி ஊழியரை கடத்தி நகை-பணத்தை கொள்ளையடித்த சம்பவம் தா.பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை, வழிபறி, போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார்கள், ஆகையால் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்