Crime: 5 மாதங்களில் 4 முறை.. SI-யின் மிருகத்தனம், கண்டுகொள்ளாத அரசு - பெண் மருத்துவரின் விபரீத முடிவு
Crime: மகாராஷ்டிராவில் உதவி காவல் ஆய்வாளரால் 4 முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்பட்ட பெண் மருத்துவர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: தற்கொலை செய்து கொண்ட மருத்துவர் எழுதிய கடிதத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனக்கு அழுத்தம் கொடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
பெண் மருத்துவர் தற்கொலை:
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா பகுதியில் உதவி காவல் ஆய்வாளரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட, 26 வயதே ஆன பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முன்பாக 4 பக்க கடிதம் ஒன்றை அவர் எழுதி வைத்துள்ளார். அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் மாநில காவல்துறையில் மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் காவல்துறை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு போலி உடற்தகுதி சான்றிதழ்களை வழங்க அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், மறுத்தபோது துன்புறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது இரண்டு தனிப்பட்ட உதவியாளர்களாலும் கூட அழுத்தம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
யார் அந்த பெண் மருத்துவர்?
சதாராவில் உள்ள பால்டன் துணை மாவட்ட மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்த 26 வயதுடைய அந்த பெண், தனது உள்ளங்கையில் ஒரு குறிப்பை எழுதியிருந்தார். அதில், “உதவி காவல் ஆய்வாளர் கோபால் பத்னேவாலான் தான் நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், ஐந்து மாதங்களுக்கும் மேலாக மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும்” குறிப்பிட்டு இருந்தார். அந்தப் பெண் மருத்துவமனையில் 23 மாதங்களாகப் பணியாற்றி வந்தார். கிராமப்புறத்தில் சேவை செய்ய வேண்டிய தனது பிணைக் காலத்தை முடிக்க இன்னும் ஒரு மாதமே இருந்தது. அதன் பிறகு முதுகலைப் பட்டப் படிப்பை பயிலவும் திட்டமிட்டிருந்தாராம். ஆனால், கோபாலின் துன்புறுத்தலை தாங்க முடியாமல், கடந்த வியாழனன்று இரவு அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கண்டுகொள்ளாத அரசு?
நான்கு பக்க கடிதத்தில் ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு, “உடல் தகுதி சான்றிதழ் வழங்க மறுத்ததால், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் இரண்டு தனிப்பட்ட உதவியாளர்கள் மருத்துவமனைக்குள் நுழைந்து, எம்.பியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச வைத்தனர். அவர் மறைமுகமாக என்னை மிரட்டினார்” என குறிப்பிட்டுள்ளார். மருத்துவருக்கு வந்த மிரட்டல்கள் தொடர்பாக பேசிய உறவினர் ஒருவர், “ போலி சான்றிதழ்களுக்கான மிரட்டல்கள் தொடர்பாக இரண்டு முதல் மூன்று முறை புகார் அளித்துள்ளார். காவல் கண்காணிப்பாளர் (SP) மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) ஆகியோருக்கு கடிதம் எழுதிய போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த கடிதத்தில், தனக்கு ஏதாவது நடந்தால், அதற்கு யார் பொறுப்பு என்று கேட்டிருந்தார்? வளாகத்தில் பாதுகாப்பு இல்லாததையும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அவர் டிஎஸ்பிக்கும் போன் செய்தார், அவர் திரும்ப அழைப்பதாகக் கூறினார், ஆனால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் கண்டனம்:
குற்றம்சாட்டப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். இதனிடையேம் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவரை துன்புறுத்தியதாக அவரது வீட்டு உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், பாஜக தலைமையிலான அரசாங்கம் காவல்துறையினரை பாதுகாப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் முன்பு புகார் அளித்தபோது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? மகாயுதி அரசாங்கம் காவல்துறையினரை மீண்டும் மீண்டும் பாதுகாக்கிறது, இது காவல்துறை அட்டூழியங்கள் அதிகரிக்க வழிவகுக்கிறது என்று காங்கிரஸ் தரப்பு சாடியுள்ளது. அதேநேரம், முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பாஜக உறுதியளித்துள்ளது.





















