Crime: கர்நாடகாவில் 12 ஆண்டுகளாக பெண் ஒருவர் வீட்டிற்குள் சிக்கி தவித்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


12 ஆண்டுகளாக பூட்டிய வீட்டிற்குள் பெண்: 


கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பகுதியை சேர்ந்தவர் சுனாலயா. இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுமா. இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுனாலயாவுக்கு இது மூன்றாவது திருமணமாகும்.  இந்த தம்பதிக்கு தற்போது ஒரு மகனும், மகளும் உள்ளனர். 


தன்னுடைய முதல் இரண்டு மனைவிகள் பிரிந்து சென்றதால், 3வது மனைவியான சுமாவும் தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவார் என்ற எண்ணத்தில் சுனாலயா அச்சத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தனது மனைவி சுமா மீது இவருக்கு சந்தேகம் இருந்ததாக தெரிகிறது. 


இதனால், திருமணம் முடிந்த சில நாட்களுக்கு பிறகு, தனது மனைவி சுமாவை வீட்டிற்குள் பூட்டி அடைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.  இதனால், சுமா வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல்  12 ஆண்டுகளாக தவித்து வந்துள்ளார். சுமார் 12 ஆண்டுகளாக சுமாவை அவரது வீட்டிற்குள் பூட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளார். 


கழிவறை இல்லாத கொடூரம்:


ஒரு கட்டத்தில், சுமா வீட்டிற்குள் அடைக்கப்பட்டு இருப்பது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்துள்ளது. இதனால், அக்கம் பக்கத்தினர் புகார் அளித்ததை அடுத்து, சுனாலயாவின் வீட்டிற்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள், வீட்டின் கதவை உடைத்து, 12 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு கிடந்த சுமாவை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 


இதனை அடுத்து, மனைவியை 12 ஆண்டுகளாக சித்ரவதை செய்த சுனாலயாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சுமா கூறுகையில், "எனக்கு திருமணம் நடந்து 12 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவர் என்னை வீட்டில் வைத்து சித்ரவதை செய்துள்ளார். யாரும் அவரை கேள்வி கேட்கவில்லை. எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர்.


கணவர் வேலையில் இருந்து வீட்டிற்கு வரும் வரை, பள்ளி முடிந்து தனது குழந்தைகள் வீட்டிற்கு வெளியே நின்றுக் கொண்டு இருப்பார்கள். நான் அவர்களுக்கு ஜன்னல் வழியாக உணவு தருவேன். வீட்டிற்குள் கழிவறையில் இல்லாததால், இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு அறையில் இருந்த வாளியை பயன்படுத்தினேன்" என்றார்.  இதனை அடுத்து, கணவர் மீது புகார் அளிக்க விருப்பமில்லை என்றும், தனது பெற்றோரின் வீட்டில் தங்கி திருமண பிரச்சையை தீர்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க


Uttar Pradesh: மேக்கப் சாதனங்களை பயன்படுத்திய மாமியார்..விவாகரத்து கேட்ட மருமகள்