திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட செருகளத்தூர் ஊராட்சியில் உள்ள சித்தாடி ஸ்டாலின் நகரில் 600 மீட்டர் தார்சாலை அமைப்பதற்கு 9.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த ஜனவரி மாதம் டெண்டர் விடப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாலை போடும் பணியை ஒப்பந்தகாரர் தொடங்கியுள்ளார்.  அப்போது அதே பகுதியில் வசிக்கும் சித்தாடி திமுக கிளை செயலாளரான உலகநாதன் குடும்பத்தினர் இந்த சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில்  ஈடுபட்டுள்ளனர். உலகநாதன் குடும்பத்தினர் சாலையை ஆக்கிரமித்து வேலி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவரது வீடு ஸ்டாலின் நகரின் தொடக்கத்திலும் சாலை திருப்பத்திலும் அமைந்துள்ளது. அந்த வீடு இருக்கும் இடம் புறம்போக்கு இடம் என்றும், உலகநாதன் குடும்பம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கடந்த 30 வருடங்களாக வைத்திருப்பதுடன் பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய சாலை அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.




எனவே உலகநாதன் தான் ஆக்கிரமித்துள்ள சாலை பகுதியில் வைக்கப்பட்டுள்ள வேலியை அகற்றுமாறு அதிகாரிகள் கூறியதால் உலகநாதனுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னை காரணமாக மீண்டும் மூன்று மாதங்கள் கழித்து தற்போது சர்ச்சைக்குரிய அந்த இடத்தை விட்டு விட்டு சாலைப் பணியினைச் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். அப்போது உலகநாதன் மற்றும் குடவாசல் ஒன்றிய திமுக மகளிரணி தலைவியான அவரது மனைவி ஜெசி ப்ளோரா ஆகியோர் அரசு ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.




அதன் அடிப்படையில் காவல்துறையினர் கொலை மிரட்டல், தகாத வார்த்தைகளில் திட்டுதல், அத்துமீறி நுழைதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து உலகநாதனை நன்னிலம் கிளை சிறையிலும், ஜெசி ப்ளோராவை திருவாரூர் மகளிர் கிளை சிறையிலும் அடைத்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், காவல்துறை மற்றும் அரசு அலுவலகங்களில் கட்சியினர் சிபாரிசு போன்றவற்றிக்கு செல்லக் கூடாது என்றும் அவர்களது பணியில் இடையூறு செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறார். இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உலகநாதன் மற்றும் அவரது மனைவி ஜெசி ப்ளோரா ஆகியோர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண