குஜராத் மாடலுக்கு விபூதி - 70 ஆயிரம் பேருக்கு மொட்டையடித்து ரூ.2,700 கோடியை சுருட்டிய பிரதர்ஸ் - மேட்டர் என்ன?
Rajastahan Crime: ராஜஸ்தானை சேர்ந்த சகோதரர்கள் இருவர், 70 ஆயிரம் பேரை ஏமாற்றி மோசடி செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.

Rajastahan Crime: ராஜஸ்தானை சேர்ந்த சகோதரர்கள் இருவர், 70 ஆயிரம் பேரை ஏமாற்றி ரூ.2,700 கோடி பணத்தை சுருட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சகோதரர்களின் பிரமாண்ட மோசடி:
ராஜஸ்தானை சேர்ந்த சுபாஷ் பிஜாராணி மற்றும் ரன்வீர் பிஜாராணி எனும் சகோதரர்கள், தங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து 70 ஆயிரம் பேரை ஏமாற்றி ரூ.2,700 கோடி மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும் நெக்ஸா எவர் கிரீன் எனும் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். அதன் வாயிலாக அதிகப்படியான வருமானம் மற்றும் குஜராத்தின் தோலேரா ஸ்மார்ட் சிட்டியில் நிலம் வழங்கப்படும் என முதலீட்டாளர்களுக்கு போலி வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றியுள்ளனர். தோலேரா சிட்டி திட்டம் தொடர்பான பல்வேறு பணிகளின் புகைப்படங்களை காட்டி, முதலீட்டாளர்களின் நம்பிக்கை பெற்று மோசடி செய்துள்ளனர்.
வாக்குறுதிகளை அள்ளி வீசி பிரதர்ஸ்:
மோசடி திட்டத்தில் லெவல் அடிப்படையிலான வருமானம், மற்ற நபர்களை சேர்த்து விடுவதன் மூலம் பரிசு மற்றும் கமிஷன் வழங்குவது ஆகியவை அடங்கும். சில முதலீட்டு இலக்குகளை அடைபவர்களுக்கு லெவலை பொறுத்து மடிக்கணினிகள், பைக்குகள் மற்றும் கார்கள் போன்ற பரிசுகள் வழங்கப்படும். தங்கள் தனித்துவமான ஐடியின் கீழ் அதிக முதலீட்டாளர்களை நியமிக்க முடிந்தால், முதலீட்டாளர்களுக்கு கூடுதல் கமிஷன்களையும் வழங்குவதாகவும் நெக்சா எவர்கிரீன் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
”ஸ்மார்ட் சிட்டி ஊழல்”
கடந்த 2014ம் ஆண்டு தொலேரா பகுதியில் ரன்வீர் ஒரு நிலம் வாங்கியுள்ளார். அதைதொடர்ந்து, முன்னாள் ராணுவ வீரரான சுபாஷும் தனது ஓய்வூதிய பணத்திலிருந்து 30 லட்ச ரூபாய் செலவில் அதேபகுதியில் நிலம் வாங்கியுள்ளார். இதையடுத்து இருவரும் சேர்ந்து நெக்ஸா எவர்கிரீன் நிறுவனத்தை தொடங்கி அகமதாபாத்தில் பதிவும் செய்துள்ளனர். தங்களை தொலேரா ஸ்மார்ட் திட்டத்தின் ஒரு அங்கமாகவே நெக்ஸா நிறுவனம் விளம்ப்பரப்படுத்தியுள்ளது. தங்களிடம் தொலேரா பகுதியில் 260 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அதில் உலகத்தரம் வாய்ந்த நகரம் உருவாக்கப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
ரூ.2,700 கோடி சுருட்டல்:
அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டு மனைகள் மற்றும் முதலீட்டு திட்டங்கல் மூலம் 70 ஆயிரம் பேருக்கும் அதிகமானோரை கவர்ந்து முதலீடு செய்ய வைத்துள்ளனர். இதன் மூலம், 2 ஆயிரத்து 676 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளனர். சலீம் கான், சமீர், ததார் சிங், ரக்ஷபால், ஒம்பால் மற்றும் சனாவர்மால் ஆகியோரை முக்கிய அதிகாரிகளாக நியமித்து, அவர்கள் மூலம் ராஜஸ்தானில் ஆயிரக்கணக்கான ஏஜெண்டுகளை பிடித்துள்ளனர் அவர்களுக்கு கமிஷனாக மட்டுமே ஆயிரத்து 500 கோடி ரூபாய் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், மோசடி செய்த பணத்திலிருந்து 260 ஏக்கர் நிலத்தையும் வாங்கியுள்ளனர்.
சகோதரர்களின் ஆடம்பர வாழ்க்கை:
சுபாஷ் மற்றும் ரன்வீர் சகோதரர்கள் சொகுசு கார்கள், சுரங்கங்கள், ஓட்டல்கள் ஆகியவற்றை ராஜஸ்தானில் வாங்கு குவித்துள்ளனர். அகமதாபாத்தில் குடியிருப்புகள், கோவாவில் 25 ரிசார்ட்களையும் சொந்தமாக்கியுள்ளனர். பணமாக 250 கோடியை கையில் எடுத்துக் கொண்ட இருவரும், மீதித்தொகையை 27 போலி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். மோசடி புகார் எழுந்ததும் தங்களது அனைத்து அலுவலகங்களையும் மூடிவிட்டு சுபாஷ் மற்றும் ரன்வீர் சகோதரர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
காவல்துறை விசாரணை:
மோசடி தொடர்பாக ராஜஸ்தானின் ஜோத்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். நெக்ஸா கிரீன் நிறுவனத்துடன் தொடர்புடைய அலுவலகங்கள் அமைந்துள்ள ஜெய்பூர், சிகார், ஜுன்ஜுனு மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் 25 இடங்களில், பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
தொலேரா ஸ்மார்ட் சிட்டி புராஜெக்ட்:
தொலேரா ஸ்மார்ட் சிட்டி என்பது குஜராத் மற்றும் மத்திய அரசு இணைந்து செயல்படுத்தும் திட்டமாகும். நாட்டின் முதல் கிரீன்ஃபீல்ட் ஸ்மார்ட் சிட்டியான தொலேராவின் பரப்பளவு, டெல்லியை (920 சதுர கிலோ மீட்டர்) காட்டிலும் இரண்டு மடங்காகும். சர்வதேச விமான நிலையம், மல்டிநேஷனல் நிறுவனங்களின் அலுவலகங்கள் ஆகியவை அங்கு கட்டப்பட்டு வருகின்றனர். இந்த திட்டம் 2042ம் ஆண்டு முழுமை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















