தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தினசரி 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று பலரும் வீடு திரும்பியும் வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கோவை மாவட்டத்தில் சென்னையை காட்டிலும் அதிகளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கோவை பீளமேட்டைச் சேர்ந்தவர் வெங்கட்சிவையா. அவருக்கு வயது 44. இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், அவர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், மருத்துவமனையில் 5 நாட்கள் சிகிச்சை நிறைவடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார். கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அவர் கடந்த ஒரு வாரமாகவே மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டு வந்தார்.
கடும் மன உளைச்சலுடன் காணப்பட்ட அவர் தனது வீட்டில் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். இதனால், படுகாயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனே மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அவர் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக, அவரது குடும்பத்தினரிடமும், அக்கம்பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மருத்துவமனை ஊழியரே, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் பலரும் மிகுந்த மன வலிமையுடன் மீண்டு போராடி மீண்டு வந்துள்ளனர். இந்த சூழலில், கொரோனாவால் மன உளைச்சலுடன் காணப்படுவதும், கொரோனா பாதித்துள்ளதால் மீண்டு வர முடியாது என்று கருதுவதும் மிகவும் தவறு என்றும், கொரோனாவில் இருந்து மீண்டு வர மன உறுதி மிகவும் அவசியம் என்றும் மருத்துவர்களும், உளவியல் நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050