நாகலாந்தில் சில ஆண்கள் இணைந்து கிரேட் இந்தியன் ஹார்ன்பில் என்ற அழிவின் விளிம்பில் இருக்கும் பறவையைக் கொலை செய்துள்ளனர். அந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


வானத்துப் பறவையோ, கானகத்து விலங்கோ மனிதன் மீது இத்தனை வன்மம் காட்டுவதில்லை. விலங்குகளைவிட மோசமானவன் மனிதன் என்பதை நிரூபித்திருக்கிறது இந்தச் சம்பவம்.


நாகலாந்தில் சில ஆண்கள் இணைந்து கிரேட் இந்தியன் ஹார்ன்பில் என்ற அழிவின் விளிம்பில் இருக்கும் பறவையைக் கொலை செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவாரையும் பதறவைத்துள்ளது. அவர்களை நாகலாந்து போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டப்பிரிவு 1ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவையெல்லாம் இழைக்கப்பட்ட அநீதிக்கு பதில் சொல்லிவிடுமா? அந்த கொடூர வீடியோவை காண மனம் பொறுக்காது. சில நாட்கள் சமூக வலைதளங்களில் அந்த வீடியோ பரவியது. ஆனால், பலரும் அந்த வீடியோ குறித்து ரிப்போர்ட் அடித்ததால் அது தறோது பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எல்லா தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. வீடியோவைக் கூட காண முடியாத அளவிலான பெருங் கொடூரத்தை அந்த மனிதர்கள் எப்படிச் செய்தார்களோ?







மனம் வலிக்கவில்லையா?


பார்த்துவிட்டீர்கள் தானே. மனிதனாக இருந்தால் நிச்சயம் மனம் வலிக்கும். ஒரு பறவை அதனால் மனிதனை எதிர்த்து எதுவும் செய்யமுடியாது. அதை சிறைப்பிடித்து கழுத்தில் மிதித்து கம்பால் அடித்து சித்தரவதை செய்யும் அளவுக்கு குரூர எண்ணம் வர என்ன காரணம். இத்தகைய வன்முறையாளர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை தானே வழங்கப்பட வேண்டும்.


இதுமட்டுமல்ல, வனவிலங்குகளை மனிதன் படுத்தும்பாடும் சொல்லி மாளாது. ஈகோ டூரிஸம் செல்கிறேன் என்ற போர்வையில் வனத்துக்குள் கும்மாளம் போட்டு தூக்கிவீடும் பாட்டில்கள் யானைகளின் காலை பதம்பார்த்து அவற்றின் உயிரைப் பறிப்பதும் உண்டு. தூக்கி எறியும் ப்ளாஸ்டிக் பைகளை விழுங்கி இறக்கும் மான்களின் எண்ணிக்கை ஏராளம்.
குரங்குகளை கொல்வது, கொம்பிற்காக காண்டாமிருகத்தை வேட்டையாடுவது, ஆண்மைக்காக என்று உடும்பைக் கொல்வது, ஏன் உடும்புடன் உடலுறவு கொண்டு அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றுவதும். எத்தனை கொடூரங்களைத் தான் மனிதர்கள் இயற்கைக்கு எதிராக செய்வார்கள்?


இந்த உலகம் நமக்கு மட்டுமா?


இந்த உலகில் கடைசியாகத் தோன்றிய உயிரினம் தான் மனிதன். நாம் இல்லாவிட்டாலும் கூட இந்த உலகும் இயங்கும். ஆனால் விலங்குகளை அழித்துவிட்டு, இயற்கையை அழித்துவிட்டு மனிதன் வாழ முடியுமா? இதை என்றாவது நாம் யோசித்துப் பார்த்திருக்கிறோமா?  இந்த உலகம் நமக்கு மட்டுமா? என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்வது நல்லது.