உத்தரப் பிரதேசத்தில் உள்ள மஹோபா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றில், ரத்தத்தை மாற்றுவதற்கான சிகிச்சைக்குப் பதிலாக மருத்துவப் பணியாளர் ஒருவர் க்ளூகோஸ் நீரில் சிவப்பு நிற மருந்தைக் கலந்து நோயாளிக்கு ஏற்றியிருப்பது அம்பலமாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


மஹோபா சாதர் தாலுக்காவைச் சேர்ந்த பாந்த்ரா கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான மூதாட்டி ராம்குமாரி தன் மகன் ஜுகல் என்பவரோடு வாழ்ந்து வருகிறார். அவரது கணவர் உயிருடன் இல்லை. தன் மகன் ஜுகலுக்கு நோய் காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் ராம்குமாரி. மஹோபா மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் ரத்த மாற்று சிகிச்சை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். 



இந்நிலையில், மஹோபா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர் ஒருவர் ராம்குமாரியிடம் ரத்த மாற்று சிகிச்சை மேற்கொள்வதற்காக 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மூதாட்டி ராம்குமாரி தன் நகைகளை விற்பனை செய்து, பணத்தைத் தயார் செய்துள்ளார். தொடர்ந்து தன் மகனின் ரத்த மாற்று சிகிச்சைக்காக ரத்தம் பெறுவதற்காக மருத்துவப் பணியாளர் ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக வழங்கியுள்ளார். 


எனினும், ராம்குமாரியிடம் லஞ்சமாகப் பணம் பெற்ற மருத்துவப் பணியாளர் ரத்தத்திற்குப் பதிலாக, நோயாளியான ஜுகலுக்கு வழங்கப்பட்ட க்ளூகோஸ் நீரில் சிவப்பு நிறத்திலான மருந்தைக் கலந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நோயாளி ஜுகலின் உடல்நிலை மோசமாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மஹோபா மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம் அவரை மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்குமாறு பரிந்துரைத்துள்ளது. தான் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும், அரசு மருத்துவமனையில் இலவச மருத்துவம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் தன் மகனைக் கொண்டு வந்திருப்பதாகவும் மூதாட்டி ராம்குமாரி செய்தியாளர்களிடம் வருத்ததோடு தெரிவித்துள்ளார். 



இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள தலைமை மருத்துவக் கண்காணிப்பாளரும், மருத்துவருமான ஆர்.பி.மிஷ்ரா, `இந்த விவகாரம் தொடர்பான விசாரணை மேற்கொள்வதற்காக ஒரு குழு ஒருங்கிணைக்கப்பட்டு, விசாரிக்க கோரி உத்தரவிடப்பட்டுள்ளது. ராம்குமாரியால் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண் மருத்துவப் பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண