கொலை குற்ற வழக்குகள் பலவற்றில் காவல்துறையினருக்கு சிசிடிவி காட்சிகள் பெருமளவில் உதவி செய்து வருகின்றன. அப்படி மேலும் ஒரு கொலை குற்றச்சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் கொலை செய்த நபரை கண்டறிய முக்கிய பங்கு வகித்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் அம்பாலா பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றின் வெளியே நேற்று ஒரு கொலை சம்பவம் நடைபெற்றது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பான காட்சிகள் அங்கு வெளியே இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதன்படி கொலை செய்யப்பட்ட நபர் அமன் என்ற அப்பு என்பது தெரியவந்தது. இவர் மீது பல குற்ற வழக்குகள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இவர் உடன் அந்த வீடியோவில் வரும் நபர் பவுண்டி என்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இவர்கள் இருவரும் மீதும் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த சிசிடிவி காட்சிகளின்படி அமன் உடன் வந்த பவுண்டி துப்பாக்கியை தன்னுடைய துணிக்குள் மறைத்து வைத்துள்ளார். இருவரும் வெளியே வந்த பிறகு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பவுண்டி அமனை சுடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மூன்று முறை அமனை பவுண்டி துப்பாக்கியால் சுட்டுள்ளார். அமனை கொலை செய்த பிறகு பவுண்டி வேறு ஒரு காரில் தப்பி செல்வதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
பவுண்டி மற்றும் அமன் ஆகிய இருவரும் அந்த மருத்துவமனைக்கு ஐசியூவில் இருக்கிற நபர் ஒருவரை பார்க்க வந்துள்ளனர். அவரை பார்த்துவிட்டு வெளியே வந்த பிறகு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் அமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தலைமறைவாக உள்ள பவுண்டியை தேடி பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர். அந்தத் தனிப்படை பவுண்டியை தீவிரமாக தேடி வருகின்றனர். விரைவில் அவரை காவல்துறையினர் கைது செய்வார்கள் என்று கருதப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்