விழுப்புரம் குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் எழுந்த சர்ச்சையான புகார்களை தொடர்ந்து அந்த ஆசிரமத்தில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் கெடார் போலீசார் அதிரடி சோதனை நடத்தினா். அப்போது அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 33 பெண்கள் உள்பட 142 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மீட்டனர். இதே போல் அன்புஜோதி ஆசிரமத்தின் கிளை ஆசிரமமாக  வானூர் அருகே உள்ள கோட்டக்குப்பத்தில் ஒரு ஆசிரமம் இயங்கி வந்தது.


அந்த ஆசிரமத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி அங்கிருந்த 12 பெண்கள் உள்பட 25 பேரை மீட்டனர். இவ்வாறு மீட்கப்பட்ட 167 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் சற்று உடல்நலம் தேறியவர்கள், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வளத்தி உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் உள்ள அரசு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.


இந்த ஆசிரமத்தில் இருந்த கொல்கத்தாவை சேர்ந்த 30 வயது பெண் ஒருவரும், அவரது தோழி ஒருவரும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து அப்பெண்கள் இருவரும் அளித்த புகாரின்பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி உள்ளிட்ட 9 பேரையும் கைது செய்துள்ளனர்.


மேலும் இந்த ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்ட இன்னும் சில பெண்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அவர்கள் யார், யார் என கண்டறிய போலீசார் முடிவு செய்தனர். இதன் அடிப்படையில் குண்டலப்புலியூர், கோட்டக்குப்பம் ஆகிய ஆசிரமங்களில் இருந்து மீட்கப்பட்டவர்களில் 45 பெண்களுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னரே ஆசிரமத்தினரால் இன்னும் எத்தனை பெண்கள் பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்ற முழு விவரமும் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.


இதற்கிடையே பாலியல் குற்றம்சாட்டிய விழுப்புரம் குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கொல்கத்தாவை சேர்ந்த பெண் ஒருவரும் மற்றும் அவரது தோழி ஆகிய இருவரையும் நேற்று விழுப்புரம் நீதிபதி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அந்த பெண்கள் இருவரும், தங்களுக்கு நேர்ந்த அநீதிகள், தாங்கள் அனுபவித்த சித்ரவதைகள் குறித்து நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். அந்த வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.