ஹரியானாவில் 19 வயது இளம்பெண் ஒருவரை முன்னால் வகுப்பு தோழர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கொலை முயற்சி :


ஹரியானா குருகிராம் பகுதியில் உள்ள ஐஎம்டி மனேசரில் வசித்து வந்த 19 வயது பெண் அங்கிருந்து தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது சில நாட்களாக தன்னை ஒரு நபர் பின்தொடருவது போல உணர்ந்திருக்கிறார் அந்த பெண். அது அவருடன் ஒரே வகுப்பில் படித்த முன்னாள் பள்ளி மாணவர். இந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை ) காலை 8.50 மணியளவில் அந்த பெண் வேலைக்கு சென்றுக்கொண்டிருந்த நேரத்தில் மறைந்திருந்த அந்த நபர் துப்பாக்கியால் அந்த பெண்ணை நோக்கி சுட்டுள்ளார். அந்த பெண் அங்கிருந்தவர்களால உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். தற்போது அந்த பெண்ணின் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.




பின்னணி :



துப்பாக்கியால் சுட்ட நபரை காவல்துறையினர் தற்போது தேடி வருகின்றனர். விசாரணையில் அவன் பெயர்  பாஸ்குஷ்லா என்பதும் , அவர் அந்த  பெண்ணுடன் ஒரே வகுப்பில் படித்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.  காஜியாபாத்தைச் சேர்ந்த பாஸ்குஷ்லா   IMT மானேசரில் உள்ள பிஜியில்  வசித்து வருவதாகவும் செக்டார் 8ல் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளான். சுடப்பட்ட பெண்ணை   பாஸ்குஷ்லா ஒரு தலையாக தீவிரமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்த பெண்ணிடம் தன் காதலை சொல்ல  பலமுறை அணுகியும் அந்த பெண் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஸ்குஷ்லா திட்டமிட்டு அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 


பெண் வாக்குமூலம் :


இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் கூறுகையில் “"நான் அவரை காதலிக்கவில்லை என்றும், அவர் என்னை பின்தொடர்வதை நிறுத்த வேண்டும் என்று நான் அவனிடம் மீண்டும் மீண்டும் கூறினேன். இதற்கு முன்பு நாங்கள் இது குறித்து வாக்குவாதத்தில் கூட ஈடுபட்டுள்ளோம்," என தெரிவித்திருக்கிறார்.




தப்பி ஓட்டம் :


துப்பாக்கியால் சுட்ட  பாஸ்குஷ்லா அந்த பெண்ணை சுட்டவுடன் அங்கிருந்து வேகமாக தனது மோட்டார் சைக்கிளில் தப்பித்து ஓடியிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணை விருப்பமில்லாமல் காதலித்து தொல்லை கொடுத்ததால் , அந்த பெண் நிராகரிக்கும் விதத்தில் பேசியதால் , ஆத்திரமடைந்த அந்த நபர் இப்படியாக செய்திருக்க வேண்டும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவரின் நம்பர் பிளேட்டை வைத்து தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர் ஐஎம்டி மனேசர் காவலர்கள்.