மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகத்திலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில், 75 வயது மூதாட்டி ஒருவரிடம் கண்ணிமைக்கும் நேரத்தில் 12 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரின் சிசிடிவி காட்சி வெளியாகி, மயிலாடுதுறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்புக் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

பாதுகாப்பான பகுதியிலேயே துணிகரக் கொள்ளை

மயிலாடுதுறை மாவட்டத்தில், ஆரோக்கியநாதபுரம் பகுதியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இப்பகுதியில் 24 மணி நேரமும் காவலர்களின் நடமாட்டமும், பாதுகாப்புக் கண்காணிப்பும் மிக அதிக அளவில் இருக்கும். அப்படி பட்ட இடத்தில், இந்தச் சம்பவம் நடந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த இடம், எஸ்.பி. அலுவலகத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள அழகப்பா செட்டி தெரு ஆகும். இப்பகுதியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் துணிகரச் சங்கிலிப் பறிப்பு நடந்தேறியுள்ளது.

ஆலயத்திலிருந்து திரும்பிய மூதாட்டி

அழகப்பா செட்டி தெருவைச் சேர்ந்தவர் சுசிலா (வயது 75). இவர் தனது தெருமுனையில் உள்ள ஆலயத்திற்குச் சென்றுவிட்டு, நடந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். மூதாட்டி சுசிலா மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரைப் பின் தொடர்ந்த ஒரு அடையாள தெரியாத நபர் அவர் அணிந்திருந்த 12 சவரன் தங்க செயினைப் பறித்துள்ளார்.

Continues below advertisement

சிசிடிவி காட்சியில் பதிவானபடி, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களில் ஒருவன், வாகனத்திலிருந்து இறங்கி, மூதாட்டிக்குப் பின்னால் நடந்து வந்துள்ளார். சுசிலா அவர்கள் திரும்பிப் பார்ப்பதற்குள், அந்த நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த சுமார் 12 சவரன் எடையுள்ள தங்கச் சங்கிலியை மின்னல் வேகத்தில் அறுத்துக்கொண்டுள்ளார். சங்கிலியைப் பறித்த வேகத்தில் மூதாட்டி சுசிலாவைத் தரையில் தள்ளிவிட்டு, உடனடியாகத் தனது கூட்டாளியுடன் இரு சக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை

இந்தத் திடீர் தாக்குதலில் நிலை தடுமாறிய மூதாட்டி சுசிலா கீழே விழுந்ததில் காயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டுள்ளனர்.

உடனடியாக, காயமடைந்த மூதாட்டி சுசிலாவை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தேவையான முதலுதவிகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில், வீடு திரும்பினார். இந்தச் சம்பவம் அவருக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளியான சிசிடிவி காட்சி- பொதுமக்களிடையே அச்சம்

இந்தச் சங்கிலிப் பறிப்புச் சம்பவத்தை அப்பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமரா (சிசிடிவி) தெளிவாகப் பதிவு செய்துள்ளது. இரு சக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் வருவது, ஒருவர் மூதாட்டியைப் பின்தொடர்ந்து சென்று செயினைப் பறிப்பது, மூதாட்டியைத் தள்ளிவிடுவது மற்றும் தப்பித்துச் செல்வது போன்ற காட்சிகள் அனைத்தும் அந்தப் பதிவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.

இந்தக் குற்றச் செயலின் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மாவட்டத்தின் மிக முக்கியமான மற்றும் பாதுகாக்கப்பட்டப் பகுதியிலேயே இத்தகைய துணிகரக் கொள்ளை நடந்திருப்பது, காவல்துறை மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது.

மேலும் அவர்கள் அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு மர்ம நபர்களை விரைந்து பிடிக்கச் சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே நடந்த இந்தச் சம்பவம், மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நேரச் சங்கிலிப் பறிப்பு சம்பவங்களைத் தடுப்பது குறித்து காவல்துறை அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளது.