சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை, மலேசியா, இலங்கை விமானங்களில் நடத்திய சோதனையில், ரூபாய் 75.5 லட்சம் மதிப்புடைய தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு, சென்னையைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை இட்டனர்.



 

அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி  உடைமைகளை சோதித்தனார். அதன் பின்பு அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்த போது, அவருடைய உள்ளாடைக்கு மறைத்து வைத்திருந்த ஒரு பார்சலை வெளியில் எடுத்தனர். அதனுள் 760 கிராம் தங்கப்பசை இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 37 லட்சம். இதை அடுத்து, சுங்க அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து, பயணியை கைது செய்தனர்.



 

இந்நிலையில் சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது.அந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த 2 பெண்கள்  சுற்றுலா பயணிகளாக இலங்கை செல்ல வந்தனர். அவர்களை பெண் சுங்க அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக சோதனை நடத்தினர். அவர்களின் ஆடைகளுக்குள் இருந்து கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணத்தை கைப்பற்றினர்.அதன் இந்திய மதிப்பு ரூ.38.5 லட்சம்.இதையடுத்து சுங்கத்துறை இரு பெண் பயணிகளை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை நடத்திய சோதனையில் ரூபாய் 75.5 லட்சம் மதிப்புடைய முக்கால் கிலோ தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்து,2 பெண்கள் உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.