சிதம்பரம் அருகே அண்ணாமலை நகரில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர்கள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள அண்ணாமலைநகர் காவல்நிலைய ஆய்வாளர் ஆறுமுகம் (பொ), உதவி ஆய்வாளர்கள் சுரேஷ், முருகன் மற்றும் போலீசார் அண்ணாமலைநகர் அருகே உள்ள சிவகாமி நகர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சிதம்பரத்தில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் வாணியம்பாடி நெடுஞ்செழியன் (24), சென்னை அடையார் ஹபீஸ்(23), கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ராகுல் (25) ஆகியோர் என்பது தெரிய வந்தது. மேலும் ஒரு மாணவர் சிதம்பரம் எம்.கே தோட்டம் பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி படிக்கும் மாணவர் ஆகாஷ் (22) என்பதும் தெரிந்தது. இவர்களை போலீசார் சோதனை செய்ததில் அவர்கள் 4 பேரும் 6 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் அண்ணாமலைநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி அண்ணாமலைநகர் காவல் நிலையத்திற்கு வந்து மாணவர்கள் 4 பேரிடமும் விசாரணை நடத்தினார். பின்னர் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் கஞ்சா வைத்திருந்ததும், போலீசார் அவர்களை கைது செய்ததும் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.