சென்னை கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மகளிர் கல்லூரி ஒன்றில் 21 வயது மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட மாணவி 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 6ஆம் தேதி மாணவி உடலில் காயங்களுடன் வீட்டிற்கு வந்துள்ளார். அவரைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தந்தை மாணவியிடம் விசாரித்துள்ளார்.
அப்போது தன்னை கல்லூரி வாசலில் இருந்து சிலர் வெளியே அழைத்துச்சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ந்துபோன அவர், சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த புகாரின் பேரில் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் 8 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் சென்னையில் முதலாம் ஆண்டு கல்லூரி படிக்கும் சுரேஷ் என்ற நபரையும் பிளஸ் 2 மாணவர் ஒருவரையும் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அதைத்தொடர்ந்து இன்று மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணி, சேலத்தை சேர்ந்த கார்த்திக் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்