விழுப்புரம் அருகே மது வாங்கி கொடுத்து சக நண்பரை தீர்த்து கட்டிய நண்பர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். விழுப்புரம் அருகே ஆண்டிப்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் வடிவேலு என்பவருடைய வீட்டின் பின்புறத்தில் உள்ள காலியிடத்தில் வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்றும், எப்படி கொலை செய்யப்பட்டார்? என்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அண்ணா நகரை சேர்ந்த நடராஜன் மகன் சங்கரன்(வயது 35) என்பது தெரியவந்தது. இதற்கிடையே இறந்த சங்கரனின் தாய் அல்லி வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது மகன் சங்கரனை, குறிஞ்சிப்பாடி அண்ணா நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தியாகு (35) என்பவர் திட்டமிட்டு விழுப்புரம் அழைத்துச்சென்று கொலை செய்துவிட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் கூறியிருந்தார்.


காவல் துறை  விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்:-


சங்கரனும், தியாகுவும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் ஆவர். இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனிடையே நண்பர்களான அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சூழலில் தியாகு மீது விரோதம் கொண்ட சங்கரன், தனது நண்பர்கள் சிலரின் மூலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காரை ஏற்றி தியாகுவை கொலை செய்ய முயன்றுள்ளார். அதில் தியாகு காயத்துடன் உயிர் தப்பினார். சங்கரன்தான் தன்னை கொலை செய்ய ஆள் அனுப்பிய விஷயம், சில நாட்கள் கழித்து தியாகுவுக்கு தெரியவந்தது. அதிலிருந்து தன்னை சங்கரன் தீர்த்துக்கட்டுவதற்குள் நாம் சங்கரனை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று தியாகு முடிவு செய்துள்ளார்.


இந்நிலையில் கடந்த 31ந் தேதி குறிஞ்சிப்பாடியில் நடந்த உறவினர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சங்கரனும், தியாகுவும் கலந்துகொண்டனர். அங்கு அவர்கள் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் திட்டி தாக்கிக்கொண்டனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர். அதன் பிறகு அன்று இரவு தியாகு, சங்கரனை சந்தித்து நாம் இருவரும் சமாதானமாக செல்லலாம் என்று கூறி நம்ப வைத்ததோடு விழுப்புரம் அருகே பில்லூர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்று விட்டு வரும்போது மதுபானம் வாங்கி சாப்பிட்டு வரலாம் என்று சங்கரனை தியாகு அழைத்துள்ளார். தியாகுவின் சதித்திட்டம் தெரியாமல் அவருடன் விழுப்புரம் செல்ல ஒப்புக்கொண்ட சங்கரனை தியாகு தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் அழைத்து வந்துள்ளார்.


பின்னர் பில்லூர் அருகில் உள்ள ஆண்டிப்பாளையத்திற்கு சென்று அங்குள்ள காலியிடத்தில் இருவரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் சங்கரனுக்கு போதை தலைக்கேறியதும், தியாகு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார். மேற்கண்ட தகவல் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தியாகுவை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த தியாகு நேற்று விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் நீதிபதி ராதிகா உத்தரவின்பேரில் விழுப்புரம் வேடம்பட்டு சிறையில் தியாகு அடைக்கப்பட்டார். இதுகுறித்து வளவனூர் போலீசாரிடம் கேட்டபோது, சங்கரன் கொலை வழக்கில் சரணடைந்த தியாகுவை ஓரிரு நாளில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். அப்போதுதான் சங்கரன் கொலைக்கான முழு காரணமும் தெரியவரும், அதுபோல் இந்த கொலையை தியாகு மட்டும் செய்துள்ளாரா?, அல்லது அவருக்கு யாரேனும் உடந்தையாக இருந்தனரா? என்பது தெரியவரும் என்றனர்.