காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீடு ஒன்றினுள் நுழைந்த நான்கு கொள்ளையர்கள், அங்கிருந்த 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற போது, அந்த வீட்டில் தங்கியிருந்த இரு பெண்களும் தொலைக்காட்சியில் சீரியல் பார்த்துக் கொண்டே, அசட்டையாக இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த நான்கு கொள்ளையர்களையும் பிடிப்பதற்காக காவல்துறையினர் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். 


சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தின் கோனேரிக்குப்பம் பகுதியில் உள்ள மாருதி நகர் சங்கரன் தெருவில் வசிக்கும் மேகநாதன் என்பவரின் வீட்டில் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அவர் ஆடிட்டராகப் பணியாற்றி வருகிறார். மேலும், அவரது வீட்டில் அவரது சகோதரரும் வசித்து வருகிறார். அவர் அரசு ஊழியராகப் பணியாற்றுகிறார். கடந்த டிசம்பர் 23 அன்று, இரவில் மேகநாதனின் மனைவியும், உறவினரான மற்றொரு பெண்ணும் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். அப்போது இந்தக் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 



வீட்டில் இருந்த இரு பெண்களும் வீட்டுக்கு வெளியில் இருந்த பெரிய கேட்டை சரியாகப் பூட்டாமல், தொலைக்காட்சியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தனர். மேலும், தொலைக்காட்சியின் ஒலி அதிகமாகக் கூட்டப்பட்டிருந்ததால், வீட்டிற்குள் கொள்ளையர்கள் அமைதியாக நுழைந்தது இரு பெண்களின் கவனத்திற்கும் எட்டவில்லை. வீட்டினுள் நுழைந்த பிறகு, கத்தி முனையில் இரு பெண்களையும் கட்டி வைத்த கொள்ளையர்கள், அலமாரியின் சாவிகளைக் கேட்டு மிரட்டியுள்ளனர். சாவியை அளித்த பிறகு, அதில் இருந்து சுமார் 50 சவரன் தங்க நகைகளை இந்தக் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். 


இந்த நான்கு கொள்ளையர்களையும் பிடிப்பதற்காக காவல்துறையினர் முதற்கட்டமாக விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், அருகில் இருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், கொள்ளை நிகழ்ந்த வீட்டிற்குக் கொள்ளையர்கள் இரு சக்கர வாகனங்களில் வந்திருப்பது தெரிய வந்துள்ளது. வீட்டின் கேட்டிற்கு வெளியில் இரு கொள்ளையர்கள் காவலுக்கு நிற்க, மற்ற இரு கொள்ளையர்கள் வீட்டினுள் நுழைந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 



சென்னையில் புறநகர்ப் பகுதியில் இருப்பதால் காஞ்சிபுரம் பகுதியில் கடந்த சில காலமாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இவற்றைத் தடுக்க, காவல்துறையினர் ரோந்து நடவடிக்கைகளையும், மக்களிடம் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் இந்தப் பகுதியில் அரசுத் துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள் பலரும், வசதி படைத்தவர்களும் உள்ளனர். எனவே இந்தக் கொள்ளைச் சம்பவம் காரணமாக இப்பகுதியில் அச்சம் பரவியுள்ளது. பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகளும் இதனால் நடைபெற்று வருகின்றன.


காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறையினர் இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணைகளில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.