ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர். 


ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில், அண்டை மாநிலமான தெலுங்கானாவில் புதிய வாகனத்தின் பூஜை முடிந்து குடும்பத்தினர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. 8 பேர் பயணம் செய்த SUV கார் பர்மனப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது அத்தங்கி-நார்கெட்பள்ளி நெடுஞ்சாலையில் உள்ள சாலையோர மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம்டைந்தனர். 


இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 


உயிரிழந்தவர்கள் பொட்டி ஸ்ரீராமுலு நெல்லூர் மாவட்டம் காவாலி மண்டலத்தில் உள்ள சிரிபுரத்தைச் சேர்ந்த டி.சுரேஷ், வனிதா, யோகுலு மற்றும் வெங்கடேஸ்வரலு என அடையாளம் காணப்பட்டனர். மேலும், காயமடைந்தவர்கள் பிடுகுரல்லா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் யு.பிரனய், ஆதிலட்சுமி, ஸ்ரீனிவாஸ் ராவ் மற்றும் கௌசல்யா என அடையாளம் காணப்பட்டனர். வாகனத்தை ஓட்டி வந்த சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.


அத்தங்கி-நார்கட்பள்ளி நெடுஞ்சாலையில் சனிக்கிழமையன்று, தெலுங்கானாவில் உள்ள கொண்டகட்டு ஆஞ்சநேயசுவாமி கோயிலில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வாகனம் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. அங்கு பயணிகள் தங்கள் புதிய காருக்கு பூஜை செய்யச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். ஒரு புதிய கார் வாங்கிய மகிழ்ச்சி ஒரு மாதத்திற்குள் ஒரு குடும்பத்திற்கு இருளாக மாறியது.


விபத்து நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.சீனிவாச ராவ் பார்வையிட்டார். ஓட்டுநர் வாகனத்தை அதிவேகமாக ஓட்டிச் சென்றதாகவும், தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.


“கொண்டகட்டு ஆஞ்சநேயசுவாமி கோவிலில் வழிபாடு செய்துவிட்டு, தங்கள் சொந்த கிராமமான சிரிபுரம் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது,” என்று பிடுகுரல்லா கிராமப்புற நிலைய சப் இன்ஸ்பெக்டர் மோகன் தெரிவித்தார்.


பல்நாடு மாவட்டத்தில் மற்றொரு சம்பவத்தில், சட்டெனப்பள்ளி நகரின் புறநகரில் ஒரு பெண் படுகொலை செய்யப்பட்டார்.


நகரில் உள்ள ரங்கா காலனியை சேர்ந்த டி.ரமாதேவி என்பவரே பலியானார். விவசாய நிலத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.


திருமணத்துக்கு மீறிய உறவுகளே கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்” போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்