திருப்பூர் மாவட்டம் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சஞ்சய் குமார் ரெட்டி. வெளிநாடு வாழ் இந்தியரான இவருக்கு சொந்தமாக திருப்பூர் அருகே கண்டியன் கோவில் கிராமத்தில்  2.26  ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பண்ணை வீடு அமைத்து வந்த தொழிலதிபர் சஞ்சய் குமார் ரெட்டி, அந்த பணிகளுக்காக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகனான ஈரோடு பகுதியைச் சேர்ந்த  தினேஷ் என்பவரிடம் 50 லட்சம் பணம்  கேட்டுள்ளர். தினேஷ் அவரது உறவினர்களான தங்கராஜ் மற்றும் ஹரிபாஸ்கர் பெயரில் இடத்தை கிரையம் செய்து கொடுத்தால் 50 லட்சம் பணம்  கடன் கொடுப்பதாகவும், வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்த பின் மீண்டும் கிரையம் செய்து கொடுத்து விடுவதாகவும் தினேஷ்  கூறியுள்ளார். இதனை நம்பி அவர்கள் இருவர் பெயரில் நிலத்தை பதிவு செய்து கொடுத்த நிலையில், 50 லட்ச ரூபாய் பணத்தை கொடுக்காமல் வெறும் 21 லட்சம் மட்டுமே கொடுத்து விட்டு மீதி தொகையினையும் கொடுக்கவில்லை என கூறப்படுகின்றது.


மீதி பணம் கேட்கும் போதெல்லாம் உரிய பதில் அளிக்காமல் தினேஷ்  காலம்  தாழ்த்தி வந்ததாகவும்,  இதனையடுத்து தினேசிடம் வாங்கிய 21 லட்சத்தை திருப்பி கொடுத்து விடுகின்றேன், பேசிய படி நிலத்தை தனது பெயருக்கே மாற்றி கொடுத்து விடும்படி தொழிலதிபர் சஞ்சய் குமார்ரெட்டி கேட்டுள்ளார். ஆனால் அதை கேட்காமல் தினேஷ் தனது உறவினர்கள் மூலம் அந்த இடத்தை வேறு நபர்களுக்கு  விற்க முயலவே, இது குறித்து சஞ்சய்குமார் ரெட்டி  திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.




இந்நிலையில் இன்று கோவை பதிவு துறை துணை தலைவர் அலுவலகத்தில் தொழிலதிபர் சஞ்சய் குமார் ரெட்டியின் வழக்கறிஞர் சார்பில் மனு  அளிக்கப்பட்டது. அந்த மனுவில் ஹரிபாஸ்கர், தங்கராஜ் ஆகியோர் பெயரில் கடன் தொகைக்காக போடப்பட்ட கிரைய பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும், வேறு எந்த நபரின் பெயர்களுக்கும் கிரையம் செய்து கொடுக்க கூடாது எனவும் பதிவுத்துறை துணைதலைவர் அலுவலகத்தில் இன்று தடங்கல் மனு தாக்கல் செய்யப்பட்டது.


பின்னர் பேசிய வழக்கறிஞர் விஜயகுமார், ”தினேஷ் கடன் தொகைக்காக போடப்பட்ட கிரைய பத்திரம் மூலம் வேறு நபர்களுக்கு கிரையம் செய்து கொடுக்க முயற்சிக்கிறார். பணத்தை திருப்பி கேட்ட போது அரசியல் காரணங்களை கூறி, காலம் தாழ்த்தினார். வேறு நபரின் பெயர்களில் நிலம்  பதிவு செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்பதற்காக முதலில் சிவில் நடைமுறைகளை பின்பற்றி உள்ளோம். குற்றவியல் நடைமுறைகளின் படியும் அடித்தடுத்து தினேஷ் மீது புகார் அளித்து  நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாகவும் வழக்கறிஞர் விஐயகுமார் தெரிவித்தார்.


இது தொடர்பாக விளக்கம் கேட்க முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷை தொடர்பு கொண்ட போது, அவரது எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.