அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூட்டு சம்பவம் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. 8 வயது சிறுவன் விளையாட்டாக துப்பாக்கியை எடுத்து சுட்டதில் 1 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. 


அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் ஒரு ஹோட்டல் அறையில் குடும்பம் ஒன்று தங்கியுள்ளது. அப்போது டிவைன் ராண்டல் என்ற நபர் தன்னுடைய 8 வயது மகனை அறையில் தனியாக விட்டு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுவன் உடன் ராண்டல் பெண் தோழியின் மகள்கள் இருந்துள்ளனர். அந்த சமயத்தில் ராண்டலின் 8 வயது மகன் தன்னுடைய தந்தை மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துள்ளார். அந்தச் சிறுவன் விளையாட்டாக துப்பாக்கியை சுட்டுள்ளார். 




அப்போது அந்த அறையில் தூங்கி கொண்டிருந்த 1 வயது குழந்தை மீது குண்டு பட்டுள்ளது. அந்தக் குழந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்தது. அதற்கு அருகே படுத்திருந்த 2 வயது குழந்தை மீதும் குண்டுபட்டுள்ளது. அந்தக் குழந்தை சிறிய காயத்துடன் உயிர் தப்பியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. 


காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராண்டல் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர் தங்கியிருந்த இடத்தில் போதை பொருட்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் ராண்டல் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். ராண்டல் மீது ஏற்கெனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. 


அமெரிக்காவில் ஒரு ஆண்டிற்கு சுமார் 350 மரணங்கள் இதுபோன்று துப்பாக்கிச் சூடு காரணமாக நடைபெறுவதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் காரணமாக அமெரிக்காவில் ஆண்டுத் தோறும் 40 ஆயிரம் மரணங்கள் வரை நடப்பதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த மாதம் நியூயார்க் மற்றும் டெக்சாஸ் நகர்களில் பெரியளவில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் பெரும் நிபந்தனைகளை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதன்காரணமாக குற்ற பின்னணி உடையவர்கள் அமெரிக்காவில் துப்பாக்கி உரிமம் பெற முடியாது என்ற சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்திற்கு கடந்த சனிக்கிழமை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண