தமிழில் கமலின் விக்ரம், இந்தியில் அக்சய்குமாரின் சாம்ராட் பிரித்விராஜ் என பிரபலங்களின் படங்கள் அண்மைக்காலத்தில் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இதனால், கொரோனா பாதிப்பு காலத்தில் இருந்து மீண்டு, சினிமா உலகம் மூச்சுவிட ஆரம்பித்து இருக்கிறது. ஆனால், மூச்சுவிட ஆரம்பித்த உடனேயே தலையணையை வெச்சு கொலை செய்வதற்கு தயாராக களமிறங்கிவிட்டனர் “ஸ்லீப்பர் செல்” வில்லன்கள்.
வட்டிக்கு பணம் வாங்கி, வட்டி, எத்தனை குட்டிபோட்டாலும் பரவாயில்லை என கோடிகளில் பணம் முதலீடு செய்து, ஒரு படத்தை எடுத்து வெளியிடுகிறார்கள். ஆனால், அதை வெறும் 10 ரூபாய் அல்லது பல சமயங்களில் இலவசமாக பார்க்கச் செய்து விடுகிறார்கள் தமிழ்ராக்கர்ஸ் போன்ற “பைரஸி” மோசடியாளர்கள்.
3-ம் தேதி கமலின் விக்ரம் படம் வெளியாகிறது. முதல் காட்சி முடிவதற்கு முன்பே, தமிழ் ராக்கர்ஸ், மூவிரூல்ஸ், ஃப்லீமிஜில்லா, டெலிக்ராம் என பல சமூக தளங்களில் விக்ரம் படம் வெளியாகிறது. அதுவும் HD தரத்தில் என ஆங்காங்கே விளம்பரங்கள் வேறு. இதனால், விக்ரம் படத்தின் வசூல் பாதிக்கப்பட பெரும் வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பாதிப்புகளின் தொடர் எதிரொலி, திரைத்தொழிலையே முடக்கிவிடும் ஆபத்து உள்ளது,
திரைப்படங்கள் மட்டுமல்ல, தற்போது தொலைக்காட்சி தொடர்கள், வெப் சீரிஸ் என அனைத்தையும் திருட்டுத்தனமாக வெளியிட்டு கல்லா கட்டுகின்றனர் இந்த பைரஸி கொள்ளையர்கள். தகவல் தொழில்நுட்பத்தின பிரம்மாண்ட வளர்ச்சி, இந்த பைரஸி களவாணித்தனத்தை தடுக்க முடியாத சூழலை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், சினிமாக்காரர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு இருந்தால், இதை ஒழித்திருக்க முடியும் என நம்புகிறார் பிரபல விமர்சகரும் சினிமா பத்திரிகையாளருமான பிஸ்மி. ABP நாடு செய்தியாளர் கல்யாணி பாண்டியனிடம் பேசும் போது, தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய அமைப்புகள் என்பது சுயநலக்காரர்கள் நிரம்பியது என்றும் ஒரு காலத்தில் தேடித்தேடி பைரஸிகாரர்களை வேட்டையாடிய விஷால், திடீரென அதை நிறுத்திவிட்டார். ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம், அவரை அமைதியாக்கிவிட்டது என்று பரவலாகப் பேசப்பட்டது எனக் கூறும் பத்திரிகையாளர் பிஸ்மி, இங்கு சினிமாவில் இதயசுத்தியோடு இந்தப்பிரச்னையை அணுக வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. அதனால் இந்த பிரச்னையை இவர்களால் என்றுமே தீர்க்க முடியாது என அடித்துக் கூறுகிறார்.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் பைரஸிக்காரர்கள் மீது பல FIR போடப்பட்டு இருந்தாலும், பெரிய பலன் கிடைக்கவில்லை. தற்போதுகூட, மும்பையில் இதுபோன்ற பைரஸி விடீயோவை ஆன்லைனில் வெளியிட்டவர்கள் மீது கைது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அதுமட்டுமல்ல, தற்போது பெங்களூருவில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார் இந்தியா கொடுத்த புகாரின் அடிப்படையில், தமிழ்ராக்கர்ஸ், தமிழ் ப்ளாஸ்டர்ஸ், தமிழ் எம்வி, பிக்காஷோ டிவி உள்ளிட்ட சில வலைதளங்களின் மீது IT சட்டம், காப்பிரைட் சட்டம், IPC சட்டம் என பல பிரிவுகளின் கீழ் FIR போடப்பட்டு, அவர்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகப் பெங்களூரு சைபர் போலீசாரிடம் பேசிய போது, முக்கிய துப்பு கிடைத்துள்ளதால், விரைவில் பைரஸி திருடர்களை அலேக்காக தூக்குவோம் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஆனால், நினைத்த நேரத்தில் பச்சோந்தி போல், புதிய, புதிய டொமைன்களில் இருந்து மாறி,மாறி பைரஸிகளை வெளியிடும் தமிழ்ராக்கர்ஸ் போன்றோரைத் தடுப்பது சாதாரண காரியமல்ல. அதுவும் 2011-ம் ஆண்டில் இருந்து தமிழ்ராக்கர்ஸ் மட்டும் நடத்திய இந்த பைரஸி வியாபாரத்தில், தற்போது பலர் வந்துவிட்டார்கள். அதுவும் OTT வந்தபிறகு, HD தரத்தில் டெலிக்ராம் போன்ற தளங்களில் அழகாக, சுடச்சுட வெளி வருகிறது எனக் கூறுகிறார் என பிரபல தயாரிப்பாளர், இயக்குநர், விமர்சகர் என பல திரை முகங்களைக் கொண்ட தனஞ்செயன். அன்று விசிடியில் தொடங்கிய இந்த பைரசி, இன்று டெலிகிராமிற்கு வந்து நிற்கிறது. இங்கு உண்மை என்னவென்றால் சினிமாவால் இந்த டெக்னாலாஜிக்கு எதிராக போராடமுடியவில்லை. ஒருபக்கம் எப்படி ஓடிடி நமக்கு பயனை தருகிறதோ, அதன் மறுபக்கம் நமக்கு பெரிய இழப்பையும் தருகிறது என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை என்கிறார் தனஞ்செயன்.
உண்மையில், இந்த பைரஸி தயாரிப்பவர்களைக் கண்டறிவது மிகக் கடினம் எனக் கூறும் சைபர் க்ரைம் தடுப்பு பிரிவு ஆலோசகர் ஏகலைவன் முத்தய்யா, இந்தத் திருட்டின் முதலாளிகள் யார் என்பதைக் கண்டறிவது மிகக் கடினம் என்கிறார். ஆனால், பல நாடுகளில் பலர் ஸ்லீப்பர் செல்களாக செயல்படுகிறார்கள் என்றும் அவர்களில் சிலர்தான் அவ்வப்போது கைது செய்யப்படுகிறார்கள் என்றும் கூறுகிறார். ஆனால், தொடர் நடவடிக்கையும் கண்காணிப்பும் இந்த திருடர்களின் அட்டூழியத்தை பெருமளவு கட்டுப்படுத்தும் என நம்பிக்கையுடன் கூறுகிறார் சைபர் நிபுணர் ஏகலைவன்.
தமிழ்ராக்கர்ஸ் போன்ற சினிமா விரோத வலைதளங்கள் ஆக்டோபஸ் மாதிரி, ஒரு தளத்தை மூடினால், மறுதளத்தில் வியாபிக்கும் திறன் கொண்டவை என்பதால், அவர்களை நிரந்தரமாக அழிப்பது என்பது முடியாது என்பதுதான் யதார்த்தம். ஆனால், கேன்சர் எனும் புற்றுநோய் மாதிரி, இந்த பைரஸி திருட்டு சினிமா தொழிலை கொஞ்சம் கொஞ்சமாக பாதித்து வருகிறது என ABP நாடுசெய்தியாளரிடம் கூறுகிறார் திரைத்துறை கட்டுரையாளர் அருள்செல்வன். கமல்ஹாசனின் விக்ரம், புஷ்பா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற பெரிய பட்ஜெட் படங்கள், பிரம்மாண்டம் மற்றும் நட்சத்திர பட்டியலின் காரணமாக தியேட்டருக்கு ரசிகர்களை வரவழைத்து தப்பிவிடுகிறார்கள். ஆனால், திரைத்துறையில் அதிகம் வெளியாகும் மினிமம் பட்ஜெட், நடுத்தர பட்ஜெட் படங்கள், இந்த பைரஸி கொள்ளையர்களால் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், கோலிவுட் போன்ற பல திரை தயாரிப்பு மையங்கள் மூடுவிழா கண்டாலும் அதிர்ச்சியில்லை என வேதனையுடன் கூறுகிறார் திரைத்துறை கட்டுரையாளர் அருள் செல்வன்.
நேரம் வந்துவிட்டது என்பார்களே அப்படியொரு நிலைதான் தற்போது வந்துவிட்டது. இப்போது முடியாவிட்டால் எப்போதும் முடியாது என்ற நிலைக்குச்செல்லும ஆபத்து இருக்கிறது. கோலி வுட், பாலி வுட், டோலி வுட், மோலி வுட், சேன்டல் வுட் என அனைத்துவகை திரை தயாரிப்பு மையங்களும் ஒன்றிணைய வேண்டும். அதுமட்டுமல்ல, OTT நிறுவனங்கள், பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் என அனைவரும் ஒன்றிணைந்து, போலீசாரின் சைபர் துறைக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் தொடர் அழுத்தம் தர வேண்டும். இதுபோன்ற பைரஸி திருடர்களைத் தொடர்ந்து கண்காணித்து, எப்படி மாறினாலும் விடமாட்டோம் என விடாது துரத்தினால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.
சென்னை, பெங்களூரு, மும்பை என பல முக்கிய நகரங்களின் போலீசார் ஒன்றிணைந்து தகவல்களையும் பரிமாறி இன்டர்போல் போன்ற சர்வதேச போலீசாருடன் இணைந்து செயல்பட்டால், இந்த பைரஸி திருடர்களைப் பெருமளவு கட்டுப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால், பைரஸி கொள்ளையர்கள், “விடாது கருப்பு” ஆகத் தான் இருப்பார்கள் என்பது நிதர்சனம்