நெல்லை அருகே உள்ள இட்டேரியை சேர்ந்தவர் தங்கராஜ்(50). இவருடைய மனைவி இறந்து விட்டார். தங்கராஜின் மகன் தமிழரசன். தமிழரசன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பெயர் முத்துமாரி (வயது 28). மனைவி இறந்த நிலையில் தங்கராஜ் வீட்டை தனது மகன் தமிழரசனுக்கு எழுதி கொடுத்ததாக தெரிகிறது. மேலும் தனது மனைவி இறந்த நிலையில் திடீரென 2-வது திருமணம் செய்வதற்கு முயற்சி செய்து வந்துள்ளார். அதேசமயம் மருமகளுக்கும் மாமனருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.  இதனால் இரண்டாவது திருமணம் செய்தால் மனைவியோடு வீட்டில் தனியாக வாழ முடியாது என எண்ணிய தங்கராஜ்,  மகனுக்கு எழுதிக் கொடுத்த வீட்டை தனது பெயரில் மீண்டும் எழுதி தருமாறு கேட்டு தகராறு செய்துள்ளார். இதனை தமிழரசன் மறுத்து வந்ததாகவும் தெரிகிறது. 


மேலும் தமிழரசன் மற்றும் மருமகள் முத்துமாரி ஆகியோர் தங்கராஜை 2-வது திருமணம் செய்யக்கூடாது என்றும் கண்டித்து உள்ளனர். இதனால் தங்கராஜ் கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். இந்த நிலையில்  நேற்று தமிழரசன் அருகில் உள்ள கடைக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த தங்கராஜ், இரும்பு கம்பியை எடுத்து தனது மருமகள் முத்துமாரி தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். மேலும் அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்துள்ளனர். அவர்களை கண்டதும் தங்கராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து முன்னீர்பள்ளம் காவல் நிலையம் மற்றும் 108க்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முத்துமாரியை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல்  முத்துமாரி பரிதாபமாக உயிரிழந்தார்.





இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த முத்துமாரியின் உறவினர்கள்  அரசு மருத்துவமனையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மருமகளை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மாமனாரை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதை அறிந்த முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மருத்துவமனைக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்வதே போலீசாரின் முதல் பணியாகும். அதன்படி இந்த வழக்கிலும் தங்கராஜை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம் என்றார். இருந்த போதிலும் இதில் உடன்பாடு ஏற்படாததால்  உறவினர்கள் பிணவறையில் உள்ள முத்துமாரி உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.  இச்சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார்  கொலை வழக்கு பதிவு செய்து  தங்கராஜை தீவிரமாக  தேடி வருகின்றனர். இரண்டாவது திருமணத்திற்கு இடையூறாக இருந்த மருமகளை மாமனார் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கிராம மக்களிடையே சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.